தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது உறுதி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய மற்றும் தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலை ஏற்படும். இதற்காகவே தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம்” இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த உயர் பீட சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல் எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்