நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோசடி நிதி பரிவர்த்தனைகள் காரணமாக இலங்கை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அவரின் கூற்றுப்படி, ரூ.300 பில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத பணம், இறக்குமதிகளுக்கான Telegraphic Transfers (TT) மற்றும் Advance Payments மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி பரிவர்த்தனைகளில் சில வங்கிகளின் கிளைகள் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வங்கிக் கிளை மேலாளர் வேறு கிளைக்கு மாற்றப்பட்ட பின்னரும் அதே வகை மோசடி அங்கு தொடர்ந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இந்த மோசடிகள் 2023 முதல் இடம்பெற்று வருவதாகவும், ரூபாயில் நடைபெற்ற இந்த சட்டவிரோத பரிவர்த்தனைகள் பின்னர் அந்நியச் செலாவணியாக மாற்றப்பட்டதால் நாட்டுக்கு மிகப்பெரிய வெளிநாட்டு நாணய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நிதி மோசடி தொடர்பாக சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் மற்றும் நிதி மோசடிகளை முற்றிலும் ஒழிக்கவே மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதன்போது நாட்டில் நடைபெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். கடந்த காலத்தை விட இன்றைய குற்றக் குழுக்கள் பெரிய வலையமைப்புகளுடன் மிகவும் நவீன முறையில் இயங்குவதாகவும், அதனால் அவற்றை ஒடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அண்மைக்கால நடவடிக்கைகளில் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கோக்கெய்ன், 5,543 கிலோ ICE, 1,543 கிலோ Kush, 5,110,735 போதை மாத்திரைகள் மற்றும் 2,454,267 போதை காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த 23 பேரை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்புப் படைகளில் இருந்த சிலர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், லசந்த விக்ரமதுங்க படுகொலை, கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் பொத்தல ஜயந்த மீதான வன்முறை உள்ளிட்ட வழக்குகளுடன் தொடர்புடையதாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் எதிர்க்கட்சியின் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இறுதியாக, நாகரிகமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதற்கான மாற்றம் நாடாளுமன்றத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய நாடாளுமன்றத்தில் ஒழுக்கம் குறைவாக இருப்பதாகவும், குறிப்பாக கேள்வி நேரங்களில் சபாநாயகரை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து இடையூறு செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Standing Order 27(2) கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

pagetamil

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்