சுமந்திரன், சிவஞானத்தை பதவி விலகக் கோரும் தொகுதிக் கிளை.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அக் கடிதத்தில் தமிழரசுக் கட்சியின் விதிமுறைகளை மீறிய பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவையாவன, 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்பு மனு சமர்ப்பித்தலில் முறைகேடுகள்.

2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்கள் தலைமையில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனு படிவங்களை பயன்படுத்தி சில வேட்பாளர்களை ஏமாற்றியும் போலிக் கையொப்பமிட்டும் வலி. வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உங்கள் வழிகாட்டலிலும் மற்றும் உங்கள் கையொப்பத்திலும் தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தமை சம்பந்தமாக தங்களுடன் பலமுறை நேரடியாக சந்தித்து முறைப்பாடு செய்தும் மற்றும் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்ககையும் எடுக்கப்படவில்லை என்பது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும்.

21.10.2025 அன்று காங்கேசன்துறை தொகுதிக் கிளைக்கு எதிராக போட்டிக் கிளை அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் வலி. வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனு முறைகேடுகளை தங்களுக்கு அறிக்கையிட்டிருந்தோம். வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிலுள்ள முறைகேடுகளை தங்களுக்கு நேரடியாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் எந்தவித வெளிப்படையான விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காமல் முறைகேடுகளை வெளிப்படுத்தியவர்களையும் நியாயம் கேட்ட நபர்களையும் ஒதுக்கி கட்சியின் விதிமுறைகளை மீறி காங்கேசன்துறைத் தொகுதிக் கிளைக்கு எதிராக 21.10.2025 அன்று போட்டிக் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இது காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை அங்கத்தவர்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை நடாத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முனைப்பாகும் எனக் கருதுகின்றோம்.

புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதில் முறைகேடுகள்.

31.05.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தெரிவுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம் நடாத்தப்படுவது தொடர்பாக காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இத்தகைய தொடர் முறைகேடுகள் காரணமாக கட்சியின் விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறிய செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இச் செயற்பாடுகள் கட்சியின் யாழ். மாவட்ட தொகுதிக் கிளைகள் சார்ந்த அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடனும் தியாக மனப்பான்மையுடனும் நேர்மையாகவும் பக்கச்சார்பின்றியும் உழைத்த தலைவர்களான தந்தை செல்வா, வன்னியசிங்கம், இ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் உருவாக்கிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களாகவும் மற்றும் பொதுச் செயலாளர்களாகவும் இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம், கதிரவேல்பிள்ளை ஆலாலசுந்தரம், தங்கத்துரை. நீலன்திருச்செல்வம் போன்ற உன்னதமான தலைவர்கள் அமர்ந்த பதவிகளில் தாங்கள் அமர்ந்து கொண்டு சர்வாதிகாரப்போக்குடனும் சுயநலத்துடனும் வெளிப்படைத்தன்மையற்றும் நடந்து மாபெரும் ஜனநாயக கட்சியான தமிழரசுக் கட்சியை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என்பது உறுதி.

தங்களின் இந்த வகிபாகத்தின் மூலம் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிகளை வகிக்கும் தகுதியினை தாமாகவே இழந்தவர்களாக தங்களை கருதவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து உடனடியாக இராஜினமா செய்யுமாறு காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்