அதிக உணவு பணவீக்கம், முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன.

பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.

இலங்கையில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்தி 40 வீதம் முதல் 50 வீதம் வரை குறைந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உரம் மற்றும் எரிபொருள் (நிலத்தை பண்படுத்தல், போக்குவரத்து மற்றும்அறுவடை நடவடிக்கைகளுக்கு) பற்றாக்குறை உணவு உற்பத்தி, விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கடன் எல்லையின் கீழ் 65,000 மெட்ரிக் டன் யூரியா கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முதல் ஏற்றுமதியிலிருந்து விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 80 சதவீதத்தை எட்டியுள்ளது. இது பாகிஸ்தானில் 26 சதவீதமாகவும், பங்களாதேஷில் 8.3 சதவீதமாகவும் உள்ளது.

இலங்கையில் கடந்த ஜூனில் 75.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் 82.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே சமயம் உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் 2022 இல் 43.6 சதவீதத்திலிருந்து 52.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வானது உலகளாவிய நெருக்கடியைத் தூண்டியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது மில்லியன் கணக்கான மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பெரிதாக்கும்.

அத்துடன் ஆதாயங்களை அழித்து விடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது. யுக்ரைன் போர், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் என்பவற்றால் தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சி ஆகியவை பல ஆண்டுகால வளர்ச்சி ஆதாயங்களை மாற்றியமைத்து, உணவு விலைகளை என்றுமில்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளன.

உயர்ந்துவரும் உணவுப் பொருட்களின் விலை குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள மக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் அவர்கள் அதிக வருமானம் உள்ள நாடுகளில் உள்ள மக்களை விடவும் உணவுக்காக தங்கள் வருமானத்தில் பெரும் பங்கை செலவிடுகிறார்கள் என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்