முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம், சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் போது அரசாங்கத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணை நடத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் அதாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.
சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, அவர் தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





