பிரித்தானியாவில் வாழும் இலங்கை குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு அமைச்சு உத்தரவு!

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்கள் பலருக்கு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களின் குடும்ப விசாக்கள் மீதான அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாடுகளினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் த கார்டியன் பத்திரிகையின் அறிக்கையின்படி, கடந்த சில வாரங்களில் மாத்திரம் ஐந்து வயதுடைய சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து பிள்ளைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பங்கள் அனைத்தும் பராமரிப்பு ஊழியர் விசாக்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதற்கு முன்னரே பிரித்தானியாவிற்கு வந்திருந்த போதிலும், தற்போது அவர்களைப் பிரிந்து செல்லுமாறு அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்கொட்லாந்தின் பேர்த் பகுதியில் வசிக்கும் வருணி ஆரச்சிகே என்ற இலங்கை பராமரிப்பு ஊழியர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் 2022ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று பிரித்தானியாவிற்கு வந்ததில் இருந்து சட்டப்பூர்வமாகவே வாழ்ந்து வருகிறோம்.

எனது விசா 2031ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னைச் சார்ந்து வாழும் எனது கணவர் மற்றும் குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். எனது 8 மற்றும் 5 வயதுடைய பிள்ளைகள் இங்குள்ள பாடசாலையில் சிறப்பாகக் கல்வி கற்று வருகின்றனர் என தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இதேபோல் 2022 ஒக்டோபரில் வருகை தந்த மற்றொரு இலங்கை ஊழியரான ரசிக சமரசிங்க தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த நாட்டில் அனைத்தையும் சட்டப்பூர்வமாகவே செய்துள்ளோம், ஒவ்வொரு வரியையும் சரியாகச் செலுத்தியுள்ளோம். நாங்கள் காலாவதியான விசாவுடன் தங்கியிருப்பவர்கள் அல்ல. எனது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தையே நான் விரும்புகிறேன். எனது குடும்பம் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்றார்.

கடந்த 2023ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சம் பராமரிப்பு ஊழியர்களுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பிரித்தானியாவில் இணைந்துள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே இந்த விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, பராமரிப்பு ஊழியர்கள் தங்களைச் சார்ந்திருப்பவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தடை செய்யப்பட்டதுடன், வெளிநாட்டு ஆட்சேர்ப்புகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் மறுக்கப்படும் சம்பவங்கள் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அங்கு நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான தகுதிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தினால், பெருமளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் எனவும், இதனால் பிரித்தானியாவின் பராமரிப்புத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விசா கொள்கையை நியாயப்படுத்தியுள்ள பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர், பிரித்தானியாவில் குடியேறுவது என்பது ஒரு சலுகையே தவிர, அது உரிமை அல்ல என்றும், நாட்டின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கே அது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்