இலங்கையில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் லிட்டருக்கு 103 ரூபாய் முதல் 155 ரூபாய் வரை பாரியளவில் அதிகரித்துள்ளன.
நேற்று நள்ளிரவு (மே 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய விலை திருத்தத்துடன், இந்த ஆண்டின் மிக உயர்ந்த எரிபொருள் விலை உச்சத்தை நாடு எட்டியுள்ளது.
மார்ச் 1 ஆம் திகதிக்கு முன்னர் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில் ஒக்டேன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 155 ரூபாயாலும், ஒக்டேன் 92 பெட்ரோல் 141 ரூபாயாலும், லங்கா ஒட்டோ டீசல் 126 ரூபாயாலும், லங்கா சுப்பர் டீசல் 149 ரூபாயாலும் மற்றும் மண்ணெண்ணெய் 103 ரூபாயாலும் ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளன.
முதலாவது திருத்தம்
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய கிழக்கில் வெடித்த மோதல் சூழலைத் தொடர்ந்து மார்ச் 1 அன்று முதல் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒக்டேன் 92 பெட்ரோல் 1 ரூபாயால் (ரூ. 292 இலிருந்து 293 ஆக) உயர்ந்தது.
ஒட்டோ டீசல் 4 ரூபாயாலும் (ரூ. 281), சுப்பர் டீசல் 6 ரூபாயாலும் (ரூ. 329) அதிகரித்தன. ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
இரண்டாவது திருத்தம் (மார்ச் 10)
ஒக்டேன் 95 பெட்ரோல் 25 ரூபாயால் உயர்ந்து 365 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாயால் உயர்ந்து 317 ரூபாயாகவும் மாறின.
இதேவேளை ஆட்டோ டீசல் 303 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 353 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டன.
மூன்றாவது திருத்தம் – பாரிய உயர்வு (மார்ச் 22):
உலகளாவிய எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 22 அன்று வரலாற்றின் மிகப்பெரிய ஒற்றை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரே நாளில் 90 ரூபாய் அதிகரித்து 455 ரூபாயாக உயர்ந்தது.
ஒக்டேன் 92 பெட்ரோல் 81 ரூபாய் அதிகரித்து 398 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் 79 ரூபாய் அதிகரித்து 382 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 90 ரூபாய் அதிகரித்து 443 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் 60 ரூபாய் அதிகரித்து 255 ரூபாயாகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டன.
நான்காவது திருத்தம் (மே 03):
மே மாத தொடக்கத்தில் ஒக்டேன் 95 பெட்ரோல் 15 ரூபாயாலும் (ரூ. 470), ஒக்டேன் 92 பெட்ரோல் 12 ரூபாயாலும் (ரூ. 410), ஒட்டோ டீசல் 10 ரூபாயாலும் (ரூ. 392), சுப்பர் டீசல் 15 ரூபாயாலும் (ரூ. 458), மண்ணெண்ணெய் 10 ரூபாயாலும் (ரூ. 265) அதிகரிக்கப்பட்டன.
ஐந்தாவது திருத்தம் (மே 31 நள்ளிரவு முதல்):
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த தற்போதைய திருத்தத்தின் படி, ஒக்டேன் 95 பெட்ரோல் மேலும் 25 ரூபாய் அதிகரித்து 495 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாய் அதிகரித்து 434 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
ஒட்டோ டீசல் 15 ரூபாய் அதிகரித்து 407 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 20 ரூபாய் அதிகரித்து 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் 20 ரூபாய் அதிகரித்து 285 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
பெப்ரவரி 1 ஆம் திகதி நிலவிய விலைகளுடன் தற்போதைய விலைகளை ஒப்பிடுகையில், கடந்த நான்கு மாதங்களில் ஒக்டேன் 95 பெட்ரோல் 45.6 வீதமும், ஒக்டேன் 92 பெட்ரோல் 48.6 வீதமும், ஒட்டோ டீசல் 46.9 வீதமும், சுப்பர் டீசல் 48 வீதமும் அதிகரித்துள்ளன.
இதில் எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மிக அதிகபட்சமாக 56.6 வீதம் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இராணுவ மோதல்களின் காரணமாக மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலே இந்த விலை உயர்வுகளுக்கு முக்கிய காரணமாகும்.
உலகின் மிக முக்கியமான மசகு எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ‘ஹோர்முஸ் நீரிணையின்’ பாதுகாப்பு கேள்விக்குறியானதால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் போதிலும், சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையின் தாக்கம், இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக இவ்வாறான தொடர் விலை அதிகரிப்புகளாகப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





