ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லைச் சோதனை நடைமுறைகளால் ஏற்படும் நீண்ட வரிசைகள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு, விஸ் ஏர் (Wizz Air) விமான நிறுவனத்தின் தலைவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகள், ஐரோப்பாவிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் தங்களது உயிரியளவுகளை (Biometrics – கைரேகை போன்றவை) பதிவு செய்ய வேண்டிய புதிய Entry Exit System (EES) முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்காக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு சோதனையில் ஏற்படும் இந்தத் தாமதத்தால் சில பயணிகள் தங்களது விமானங்களைத் தவறவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, வழக்கமான இரண்டு மணி நேரத்திற்குப் பதிலாக மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை அடைய வேண்டும்.

இணைக்கும் விமானங்களில் (Connecting flights) பயணிப்பவர்கள், எல்லைச் சோதனை வரிசைகளைக் கருத்தில்கொண்டு, விமானங்களுக்கு இடையே கூடுதல் நேர இடைவெளியைத் திட்டமிடுவது அவசியம்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதால், தங்களது கைப்பேசிக்கான போர்ட்டபிள் சார்ஜர் (Portable charger) மற்றும் குடிநீர் ஆகியவற்றை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சில விமான நிலையங்களில் இந்தச் சோதனைகளால் மூன்றரை மணி நேரம் வரை தாமதம் ஏற்படுவதாக ஏசிஐ ஐரோப்பா (ACI Europe) சுட்டிக்காட்டுகிறது.
கோடைக்கால விடுமுறையின் போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்த நிலைமை மேலும் சிக்கலாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இருப்பினும், கோடைக்கால நெரிசலைத் தவிர்க்க கிரீஸ் போன்ற நாடுகள் இங்கிலாந்து குடிமக்களுக்கான இந்த உயிரியளவு சோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
போர்ச்சுகல், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கூடுதல் எல்லை அதிகாரிகளைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம் இந்தச் சோதனைகளை முறையாகச் செயல்படுத்துவது, அந்தந்த நாடுகளின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.





