ரெலோ கூட்டத்தில் பெரும் களேபரம். – லைக்கா நிறுவனத்திடம் பணம் பெற்றது தொடர்பில் செல்வத்திடம் கேள்வி.

இலங்கை தழிழ் அரசு கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா என, அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியில் இருந்து கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று வவுனியாவில் கூடிய கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், விந்தன் கனகரட்ணம் பகிரங்கமாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்க 3 வாரங்கள் அவகாசமளிக்கப்பட்டது.

இதேவேளை, விந்தனின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியின் ஏனைய பிரமுகர்களான சுரேன் குருசாமி, சபா குகதாஸ் ஆகியோர் தரப்பிலும் தவறு உள்ளதால், அவர்களும் விளக்கமளிக்க கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த வினோநோகராதலிங்கத்திடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில் விந்தன் கனகரட்ணம் பகிரங்கமாக கூறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களை முன்வைத்து, விளக்கமளிக்க வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அப்போது, கு.சுரேன் தரப்பினர்- விந்தனை கட்சியை விட்டு இடைநிறுத்த வேண்டுமென கறாராக தெரிவித்தனர்.

இதனால் கட்சி தலைமைக்குழு இரண்டு பட்டு வாய்வீச்சில் ஈடுபட்டது.

விந்தன் சில விடயங்களை பகிரங்கப்படுத்திய விடயத்தில்- கட்சியின் யாழ் மாவட்ட பிரிவினரிலும் தவறுள்ளதை, மறுதரப்பினர் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணத்தில் ரெலோ தரப்புக்கு 2 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டால், விந்தனையும் வேட்பாளராக்குவதாக கட்சியின் தலைமைக்குழு முடிவெடுத்திருந்தது. ஆனால், தலைமைக்குழுவுக்கு தெரியாமல் விந்தனின் பெயர் வெட்டப்பட்டு, சசிகலா இணைக்கப்பட்டது எப்படி? இதற்கு சுரேன் உள்ளிட்டவர்கள் பதிலளிக்க வேண்டுமென பலரால் வலியுறுத்தப்பட்டது.

வேட்புமனுவில் கையெழுத்திட விந்தனை அழைக்க, தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லையென்றும் சுரேன் குறிப்பிட்டார்.

சுரேன் பொய் சொல்வதாக குறிப்பிட்ட விந்தன், அவ்வாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்றும், அவ்வாறு தெலைபேசி அழைப்பு விடுத்தால், தொழில்நுட்ப ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்டார். சுரேன் தரப்பினர் அவ்வாறான ஆதாரங்களை முன்வைக்கவில்லை.

கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்கட்சி படுகொலைகளில் ஈடுபட்டவர், போதைப்பொருள் கடத்தியவர் என விந்தன் பகிரங்கமாக கூறிய விடயங்களில் ஆதாரங்களை முன்வைக்குமாறும், இது தொடர்பில் தானும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிவித்துள்ளதால், இந்த இடத்தில் ஆதாரஙகளை முன்வைக்க முடியாது என்றும், நீதிமன்றத்திலும், கட்சிக்கு வழங்கவுள்ள விளக்கத்திலும் அதை குறிப்பிடுவதாக விந்தன் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, இரு தரப்பாக பிரிந்து காரசாரமான வார்த்தைப் போர் நடந்தது. கைகலப்பு ஏற்படும் சூழலுக்கு நெருக்கமான நிலைமை காணப்பட்டதாக தலைமைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ரெலோ முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

விந்தனை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தி, விளக்கம் கேட்கும் தீர்மானத்தை செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், குருசாமி சுரேன், சபா குகதாஸ், தி.நிரோஸ், செ.மயூரன், விஜிந்தன், சீலன், மன்னார் மோகன் ஆகியோர் ஆதரித்தனர். பிரசன்னா இந்திரகுமார், ஹென்ரி மகேந்திரன், வினோநோகராதலிங்கம், கந்தசாமி லிங்கராசா, கமல்ராஜ் ஆகியோர் எதிர்த்தனர்.

பெரும்பான்மை வாக்குகளால், விந்தனை இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்த தீர்மானத்துக்கு வாக்களிப்பதற்காக உறுப்பினர்கள் முன்கூட்டியே தயார்படுத்தப்பட்டதாக மறுதரப்பினர் குற்றம்சாட்டினர்.

யாழ் மாவட்ட குழுவினர் தன்னை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தை பணத்துக்கு விற்றுவிட்டார்கள் என விந்தன் குற்றம்சாட்டியிருந்தார்.

விந்தனை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, கட்சியில் 43 வருட அனுபவத்தை கொண்டுள்ள ஹென்ரி மகேந்திரன் கண்ணீர் விட்டு அழுதார்.

அத்துடன், கடந்த பொதுத்தேர்தலில் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தின் அளவு, செலவு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டுமென விந்தன் கனகரட்ணம் ஒரு முன்மொழியை சமர்ப்பித்திருந்தார்.

லைக்கா நிறுவனத்திடம் பணம் பெறவில்லையென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஆனால், அது உண்மையல்ல என்றும், அப்படி பணம் வாங்கியது தமக்கு தெரியுமென்றும் குறிப்பிட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தமைக்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமென, வினோநோகராதலிங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் தலைமைக்குழுவின் முடிவிற்கு மாறாக யாழ் மாவட்டத்தில் விந்தன் கனகரட்ணத்துக்கு பதிலாக வேறு வேட்பாளரை களமிறக்கியது தொடர்பில் சுரேன் குருசாமியும், சபா குகதாசும் விளக்கமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

இதுதவிர, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆராயப்பட்டது. தனித்து போட்டியிட வேண்டுமென சிலர் தெரிவித்தனர். சங்கு அணியில் நீடிக்க முடியாது என சிலர் குறிப்பட்டனர்.

இறுதியாக, இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது தொடர்பில், அந்த கட்சியுடன் பேச்சு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்