மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்

தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த மிகப்பெரும் தூண்களில் ஒன்று இன்று மௌமாக சாய்ந்தது.

சினிமாவில் அடையாளம் கண்டு, தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற பெயர்களில் ஒன்று கெப்டன் விஜயகாந்த்.

உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பரீட்சயமான கெப்டன் விஜயகாந்த் நேற்று இறையடி சேர்ந்தார்.

மதுரை – திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமிக்கு மகனாக பிறந்த நாராயணன் விஜயராஜ்.

தனது 15 ஆவது வயதிலேயே கல்விப் பயணத்தை நிறுத்திக் கொண்டு, பல்வேறு போராட்டங்களின் பின்னர், 1979ஆம் ஆண்டு சினிமாத்துறையில் சங்கமித்தார்.

இனிக்கும் இளமை எனும் இவரின் முதல் படம் சினிமா வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

“தூரத்தில் இடி முழக்கம்“ என்ற படத்தில் கிடைக்கப்பெற்ற பாராட்டுக்களின் பின்னர் நாராயணன் விஜயராஜ், சினிமாத்துறைக்காக தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டார்.

‘புலன் விசாரணை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘சத்ரியன்’, ‘கெப்டன் பிரபாகரன்’,’வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என குறுகிய காலத்தில் 150 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பெறுமையும் இவரையே சாரும்.

இந்தநிலையைில், 1984 இல் மட்டும் ஒரே ஆண்டில் மாத்திரம் 8 படங்களில் நடித்து சாதனை படித்தவர் என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜயகாந்த்.

அத்துடன், 1981ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ எனும் திரைப்படம் இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுக் கொடுத்தது.
தேசப்பற்று, ஊழல், திருட்டு என சட்டவிரோத செயல்கள் குறித்த இவரின் குரல் மற்றும் திரைப்படங்கள் சமூகத்தில் தொடர்ச்சியாக ஒலித்தன.

கமல், ரஜினியின் 100 ஆவது படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில் தமிழ் திரையுல நட்சத்திரங்களுக்கும் 100 ஆவது படத்திற்கும் ராசியில்லை என்ற மூட நம்பிக்கையை தனது 100 ஆவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற படத்தின் மூலம் உடைத்தெறிந்தார்.

இந்த திரைப்படம் 200 நாட்கள் திரையரங்குகளை அலங்கரித்த நிலையில் புரட்சிக் கலைஞனுக்கு கேப்டன் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மாத்திரமின்றி, தமிழக திரைப்பட சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், 1982ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ என மாற்றம் செய்தார்.

இதுவரையில் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்த புரட்சி தலைவன் 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 2005 செப்டம்பர் 14ஆம் திகதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் பெயரில் தனக்கென புதிய கட்சியை ஆரம்பித்து புத்தி ஜீவிகள் முதல் சாமானியர்கள் என அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த முதல் பெருமை கெப்டன் விஜயகாந்தையே சேரும்.

2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்துப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

2011இல் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுடன், வெற்றி பெற்று சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும் அப்போதைய காலத்தில் முதல்வராக செயற்பட்ட ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து அதிமுகவுடனான கூட்டணி முறிவுற்றது.

தொடர்ந்து 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் விஜயகாந்த் உடல் நல பாதிப்பினால் ஓய்வெடுத்தார்.

சினிமாத்துறையிலும் அரசியல் துறையிலும் தனக்கென நீங்காத இடத்தை பிடித்த விஜயகாந்தின் நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி தமிழக அரசினால் 1994 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். விருதும் 2001 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் , 2009 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டன.

இவ்வாறு பல விருதுகளை சொந்தமாக்கிய இவர் இறுதியில் இந்தியாவின் சிறந்த குடிமகன் என்ற பட்டத்தையும் பெற்றார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த மாதம் 18 ஆம் திகதி மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து அவர் வீடு திரும்பியிருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சுகவீனமடைந்த விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் கெப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இன்று (28) காலை காலமானார்.

வாழ்விலும் கலைத்துறையிலும் அரசியல் வாழ்க்கையிலும் அளப்பரிய பங்களிப்பாற்றிய கெப்டன் விஜயகாந்தின் இழப்பு தமிழகத்தை மாத்திரமன்றி அனைத்து மக்களையும் மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்