சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பணியாளர் அளவிலான உடன்படிக்கையான முதல் மைல்கல்லை விரைவில் அடைய முடியும் என்று தாம் நம்புவதாக மத்திய வங்கியின் தலைவர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை இன்று முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து நாட்டிற்கு கடன் உதவி வழங்கும் பிரதான நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கு பயணித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ​​காலை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

தூதுக்குழுவில் மிஷன் தலைவர் பீட்டர் ப்ரூயர், துணைத் தலைவர் மசாஹிரோ நோசாகி மற்றும் நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இலங்கை தேசத்தில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகஸ்ட் 24 முதல் 31 வரை கொழும்பில் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதிக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளனர்.

இதில் சுமார் 29 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பும் உள்ளடங்கியுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தினர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்