புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்த சிவன் ஆலயத்தின் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது!

புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்த சிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கிலிருந்து மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி , அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதிவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்