அதிகாரத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தாதீர் !

குமார் சுகுணா

பொருளாதார நெருக்கடி என்பது மலையக மக்களை எந்தளவு பாதித்திருக்கின்றது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அது இன்று நேற்றல்ல மலையக மக்களின் 175 வருட வரலாற்றில் தொடர்ந்து இந்த மக்கள் பாதிக்கப்பட்டுதான் வருகின்றனர்.

மலையகம் எனும் போது நாம் தோட்ட தொழிலாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் அதனை தாண்டி வேறு தொழிலும் ஈடுபடும் மக்கள் வாழவே செய்கின்றனர். இவர்களில் அரச உத்தியோகத்தர்கள் என்பதனை தாண்டி சுயதொழில் செய்பவர்களாகவும் அதிகமானவர்கள் இருக்கின்றனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் என்பது மலையகத்தில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர்களை மட்டும் அல்ல,அவர்களை விட அதிகமாக மலையக நகர்புர மற்றும் மத்திய தர மக்களை பாதித்துள்ளது. மத்திய தரம் என்றால் நகர்புர மக்கள் மட்டும் அல்ல. தோட்டங்களில் வாழ்பவர்களும்தான்.

மலையகத்தை பொருத்த வரையில் சாதாரணமாகவே எரிவாயு அடுப்புகளுக்கும் மண்ணெண்ணை அடுப்புகளுக்கு பழக்கப்ட்டவர்கள் இவர்களே. தோட்டத்தொழிலாளிகளில் பலர் எரிவாயு மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளை பயன்படுத்துகின்றனர்.

ஆயினும் அதிகளவிலானோர் விறகு அடுப்பையே அதிகம் பயன்படுத்துகின்றனர். நாட்டில் எரிவாயு தட்டுபாடு ஏற்பட்டதும் எரிவாயு மண்ணெண்ணைக்கு மாற்றாக விறகு அடுப்பை பயன்படுத்தும் வாய்ப்பு தோட்டப்புற குறிப்பாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது.

இதனால் எரிவாயு தட்டுப்பாட்டின் பாதிப்பில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொண்டனர். ஆனால் நகர் புர மற்றும் மத்திய தர மக்கள் மாற்றுவழி தெரியாமல் விதிபிழிங்கி நிற்கின்றனர். மின்சார அடுப்புகளை பயன்படுத்தலாம் என்றால் அடிகடி மின் வெட்டு ஏற்படுவதனால் அதுவும் மிக சிரமமாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கு மக்கள் இரவு பகலாக தெருக்களில் நிற்பதனை காண்கின்றோம். ஆயினும் தேவையுடைய பலருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையே உருவாகியது. இதனால் தற்போது மின்சார கட்டண துண்டுகளை பயன்படுத்தி எரிவாயு பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் உருவாகி .அதற்கிணங்கவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இதிலும் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. காரணம் நகர்புரத்திற்கு எரிபொருள் வருவது தொடர்பான செய்திகள் நகர்புர வர்த்தகர்களுக்கு எளிதில் கிடைப்பதனால் அவர்கள் அதிகளவிலான எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக , அவர்களுக்கு விசுவாசமான மற்றும் கடைக்கு வரும் தெரிந்தவர்களை குறிப்பாக தோட்டத்தில் இருந்து வந்து நகர்புரங்களில் கூலி வேலை செய்பவர்களின் மின்கண்டன துண்டுகளை பெற்றும் அவர்களையே வரிசையில் நிறுத்தியும் மேலதிகமாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனால் குறித்த ஒரு வர்த்தகர் ஒன்றுக்கு மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பெற்று அதனை தமது தேவைகளுக்காக பதுக்கி வைத்துக்கொள்கின்றனர்.

இதேவேலை இரவு பகலாக வரிசையில் எரிவாயு சிலிண்டர்களோடு நிற்கும் மத்திய தர மக்கள் எரிவாயு சிலிண்டர்கள் இன்றி திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் என நினைக்காமல் நாம் மட்டும் உணவு சமைத்து உண்டால் போதும் என நினைப்பது சரியா.

இதனை போலவே பருப்பு , மாவு , சீனி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது கூட சில வர்தக நிலையங்களில் அவை அளவுக்கு அதிகமாக இருந்த போதிலும் மக்களுக்கு விற்பனை செய்யப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டு விலை அதிகரித்ததும் மக்களுக்கு அதிக விலையில் விநியோகிக்கின்றனர்.

இதனால் தேவையான நேரத்தில் தேவையானவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதோடு அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது.

வர்த்தகர்களை விட பயங்கரமான மோசமான விடயங்களில் மக்களின் பிரதிநிதிகளும் ஈடுபடுகின்றனர். அண்மையில் மஸ்கெலியா நகரில் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதி சிலிண்டர் எரிவாயு வரிசையில் அத்துமீறி அராஜம் செய்ததோடு தட்டிக்கேட்ட நபரை தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்களும் பதுக்கப் பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மலையகத்தில் அதிகமானவர்கள் தற்போது முச்சக்ணர வண்டியினை மூலாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வரிசையில் பல நாட்கள் காத்திருப்பவர்களுக்கு எரி பொருட்கள் கிடைக்காத நிலையில் அதனை பெற்றுகொள்ளும் சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக 500 ரூபா பெறுமதியான பெற்றோல் இரண்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வேறு வழியின்றி அத்தியாவசியமாக பெற்றால் பெற வேண்டும் என்ற தேவவையுடையவர்கள் எவ்வளவு பணமேனும் கொடுத்து பெற்றோலை தமது தேவைகளுக்காக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அன்றாட பொருளாதார தேவையை முச்சக்கர வண்டியினை செலுத்துவதன் மூலம் ஈட்டுவர்கள் என்ன செய்ய முடியும். குடும்ப தேவைக்காக இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதுபோல சமையல் எரிவாயும் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. சில மோசடி பேர்வழிகளோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுத்தருவதாகவதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்கூட எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி 21 எரிவாயு சிலிண்டர்களை பெற்று அதனை மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நபர் ஒருவரை கைது கம்பளை பொலிஸார்கைது செய்திருந்தனர்.

நாடு மிக பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கும் இந்நிலையில், நமக்கு கிடைக்கும் அத்தியாவசிய பொருட்களை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை விட்டு சற்றும் மனிதாபிமானமே இல்லாமல் எல்லாம் நமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைப்பது. மனிதாபிமானம் அற்ற செயாகும். அதனை விட பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது எத்தனை கொடுமை.

ஏற்கனவே நளிந்து போயுள்ள மக்களை இந்த நிலையில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி நசுக்கிட நினைக்கும் அரசியல் வாதிகளின் செயல்கள் எத்தனை மோசமானவை. நாட்டில் உள்ள அனைவரும் சமமான மக்களே. எனவே இக்கட்டான இந்த சூழ்நிலையில் பொருட்களை பதுக்குவதனை தவிர்த்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்வோம்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்