நாளை அமைச்சரவை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கும்

சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் வரை தற்காலிகமாக புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது. ஏற்கனவே காணப்பட்ட அமைச்சுப்பதவிகளை அமைச்சர்களே நாளை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு – 7 , பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இம்முறை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பினை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.

எனினும் எந்தவொரு கட்சியும் இது குறித்து ஸ்திரமான தீர்மானமொன்றை அறிவிக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்குது குறித்து ஆராய முடியும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எந்த கருத்தினையும் தெரிவிக்காத போதிலும் , நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ”அரசியல் சந்தர்ப்பவாதிகள் நாட்டின் தேசிய வளங்களை வீணடிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பெருமளவான அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்குப் பதிலாக, தேசிய ரீதியில் காணப்படும் எதிர்பார்ப்பை அடைந்துகொள்வதற்கு பாராளுமன்ற குழு முறைமையை மேலும் வலுப்படுத்தலாம் என்ற யோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு நிலவும் வெற்றிடம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ”பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டவர் பிரமராவார். எனது கட்சியின் நான் மாத்திரமே இருப்பதால் என்னால் பிரதமரை நியமிக்க முடியாது.” என்று பதிலளித்தார். எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்