பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் (Kalpana Raghavendar) மார்ச் 04, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் தனது கணவருடன் வசித்து வந்த கல்பனா, அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அயலவர்கள், கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து பொலிஸாரை அணுகினர். பின்னர், பொலிஸார்வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கல்பனா மயக்க நிலையில் கிடந்ததாகவும், உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தெலங்கானா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
கல்பனா ராகவேந்தர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். 5 வயதில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், 3,000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் ஒளிபரப்பான “ஸ்டார் சிங்கர்” நிகழ்ச்சியின் 5ஆம் பருவத்தில் வெற்றி பெற்று பரவலாக அறியப்பட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.