400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலையில்

400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுநாளுக்கான எரிபொருளை பெறுவதற்கு முந்தைய நாள் இரவு 9:30 க்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குமார் ராஜபக்ஷ கூறினார்.

எனினும், அன்றைய நாளுக்கான பணவரவை கணக்கிட்டதன் பின்னர் பணம் செலுத்துவது அவர்களுக்கு கடினமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். முந்தைய நாள் இரவு 9:30 க்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், அடுத்த நாள் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) எரிபொருளை வழங்காது .

இதன் விளைவாக, சில நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியாது போனமையினால் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைக் கொண்டுள்ளன.

எனினும், அவை நள்ளிரவு வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளன. நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் நுகர்வோர் தேவையும் அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குமார் ராஜபக்ஷ கூறினார்.

நாளொன்றுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகத்தை முறையே 4000 மெட்ரிக் தொன் , 3000 மெட்ரிக் தொன் என்றவாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்