ஒரு ஆண் இரு பெண்களை திருமணம் செய்ய சட்டரீதியில் அங்கீகாரமா?

‘ஒரு ஆணுக்கு இரண்டு திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தல்’ என்ற தலைப்பில் சிங்கள மொழி மூலமான போலி சட்டவரைவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சனத்தொகை பரம்பலின் நவீன போக்கிற்கு அமைய ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குறித்த ஆவணம் காட்டுகிறது.

இதனால் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை இழக்கின்றனர். அந்த உரிமையை உறுதி செய்வதற்காக இந்த சட்டவரைவு முன்வைக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த போலி சட்டவரைவில் பத்து முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் முதல் முன்மொழிவில், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்ய அதிகாரம் அளிக்கிறது, ஆனால் ஒரு பெண் இரண்டு ஆண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதன் ஆறாவது தீர்மானத்தில், முதல் மனைவிக்கு தன் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அதிகாரம் உண்டு. இருப்பினும், கணவன் திருமணம் செய்ய வேண்டிய இரண்டாவது மனைவியை முதல் மனைவி கண்டுபிடிக்க வேண்டும்.

அதாவது முதல் பெண் தன் கணவனுக்குப் பொருத்தமான வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க அதிகாரம் பெற்றவராவார்.

இந்த போலி சட்டவரைவில் பல பிழைகள் மற்றும் நடைமுறைக்கு சாத்தியமற்ற சந்தேகத்திற்குரிய முன்மொழிவுகள் உள்ளன.

இதனால் மகளிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் 2021 நவம்பர் 19 ஆம் திகதி முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த போலி சட்டவரைவு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எமது செய்தி சேவை வினவியது.

அதற்கு, இந்த சட்டவரைவு முற்றிலும் போலியானது என அமைச்சரின் ஊடக செயலாளர் சானுக குணதிலக தெரிவித்தார்.

அத்தகைய தயாரிப்புகளோ அல்லது அத்தகைய சட்டமூலமோ அல்லது முன்மொழிவோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த போலி ஆவணத்தை தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பியல் நிஷாந்த தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்