கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க, நிரந்தர போக்குவரத்துத் திட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார
பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு போன்ற புறநகர்ப் பகுதிகளில் ஏற்படக்கூடிய ,போக்குவரத்து வாகன நெரிசலை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸ், விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே, கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்தி அடுத்த வாரத்திற்குள், விசேட ஆய்வொன்று நடத்தப்படும். எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன? அதற்கான காரணங்கள் என்ன? என்று முதலில் ஒரு ஆய்வு நடத்தப்படும்.
அந்த ஆய்வின் பின்னர் எதிர்காலத்தில் கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான நிரந்தர போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ட்ரோன் கெமராக்கள் பயன்பாட்டின் நோக்கமாகும். மக்கள் சிரமமின்றி நகருக்குள் பிரவேசிப்பதற்கும், வெளியேறுவதற்குமான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும். அதன்படி, இந்த ட்ரோன் கெமரா திட்டத்தை நாம் எதிர்காலத்தில நடைமுறைப்படுத்துவோம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.