ஜனாதிபதியின் சுதந்திர தின உரை முழுவடிவம் இங்கே!

பொறுப்புகளை மறந்து உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது உகந்ததல்ல…

நாடு எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேர்மறையான அணுகுமுறையின் மூலம் பதிலளிக்க முடியும்…

எப்போதும் நாட்டுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுங்கள்…

வெற்றிகொள்ளப்பட்ட சுதந்திரம் எதிர்காலச் சந்ததியினருக்காக எப்போதும் பாதுகாக்கப்படும்…
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அந்தப் பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

இன்று (04) வெள்ளிக்கிழமை முற்பகல், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் கொண்டாட்ட கொண்டாட்ட இடத்துக்கு வருகை தருவதை அறிவிக்கும் வகையில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர், ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,

பாடசாலை மாணவ, மாணவியரினால் தேசிய கீதம் பாடப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், ஜனாதிபதி அவர்களை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பாடசாலை மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவோ வஸ்ஸது காலேன” கீதம் ஆகியன பாடப்பட்டன. தொடர்ந்து, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவேந்தும் வகையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தனது தேசத்துக்கான உரையை ஆரம்பித்தார்.

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை வருமாறு,

“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்மறையான அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்று, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே காலோசிதமானது.

அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தைக் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக இணையுங்கள் என்று, தேசபக்தியுள்ள மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

சுதந்திரமான ஒரு நாட்டின் கௌரவம்மிக்க ஒரு பிரஜையாக வாழ்வதற்குள்ள உரிமையை முன்னிட்டு, வரலாறு முழுவதும் பல நாடுகளின் மக்கள் கலவரங்களை நடத்தியுள்ளார்கள். போர்களை முன்னெடுத்துள்ளார்கள். பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார்கள். இலங்கையிலும், 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பல காலப்பகுதிகளில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு நாட்டை ஒன்றுபடுத்தினார்கள்.

இறுதியாக, ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன.

சுதந்திரத்தின் பின்னரும்கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடொன்றினூடாக இந்நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முயன்றமைக்கு எதிராகப் போராடவும் எமக்கு நேர்ந்துவிட்டது.

இன்று இலங்கையானது ஒரு சுதந்திரமான இறைமை பொருந்திய ஜனநாயக நாடாகும். நாம் அதன் அபிமானம் கொண்ட பிரஜைகளாவோம்.

வரலாறு முழுவதும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டுக்கு முழுச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அர்ப்பணிப்புடன் முன்னின்ற நாட்டுப் பற்றுடையவர்கள் எல்லோருக்கும் நான் இவ்வேளையில் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.

இனம், மதம் என்ற எவ்வித பேதங்களுமின்றி ஒவ்வோர் இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. அபிப்பிராயங்களைச் சுயாதீனமாக முன்வைப்பதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது.

நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது. இலங்கைப் பிரஜைகள் பரிபூரணமாக ஜனநாயக முறைமையொன்றினூடாகத் தத்தமது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்கும் விரும்பியவர்கள் அரசியல் செயற்பாட்டினூடாக அரச ஆட்சியில் சம்பந்தப்படுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. இது, எம் அனைவரது மகிழ்ச்சிக்கும் அபிமானத்துக்கும் உரியதொரு காரணமாகும்.

சுதந்திரமிக்க ஜனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில், நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பது போன்று பொறுப்புகளும் இருக்கின்றன. எல்லோரும் நாட்டுக்காகத் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சகட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புகளை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.

ஒரு நாடானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடையும் போதே, அந்நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமுள்ளதாக அமைகிறது. அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது. ஒரு நாட்டை உரிய திசையை நோக்கிக் கொண்டுசெல்லும் போது, அதற்காக நாட்டின் அனைவரது உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

மாற்றமடையாதோருக்காகக் காத்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நாம் திட்டமிட்டுள்ளவற்றைக் கைவிட நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்கமுறையான சிந்தனையின் மூலம் மட்டும் தான், நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்துக்கு வேண்டிய அர்ப்பணிப்புகளைச் செய்தால் மட்டும் தான், நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.

எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.

ஒரு நாட்டின் தலைவர், அநேகமான கஸ்டங்கள், அனர்த்தங்கள், பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரே நோக்கை நோக்கிக் குழுவொன்றை வழிநடத்துவது இலகுவானதல்ல. எவ்வளவு நல்ல நோக்கமாக இருப்பினும், நடைமுறையில் இருக்கின்ற முறைமைகளை மாற்றுவது இலகுவானதல்ல. சில விடயங்களில், உள்நாட்டைப் போன்று அந்நிய சக்திகளும் எம்மை எதிர்த்து ஒன்றுகூடுகின்றன. சிலவேளை உங்களது பக்கத்தில் நிகழும் செயல்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக நடக்கும் சதியாகத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

மக்கள் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இவ்வனைத்துப் பிரச்சினைகளையும் முகாமைத்துவம் செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவதல்ல. அதற்குத் தேவையான ஆக்கமுறையான உளப்பாங்கு எம்முள் இருக்கின்றது. நாடு எதிர்கொள்கின்ற எந்தவொரு சவாலையும் வெற்றிகாண்பதற்காகத் தலைமைதாங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்.

ஆக்கமுறையான கருத்துகளைக் கொண்டுள்ள, எதிர்காலம் பற்றிய நல்ல கனவுகளைக் கண்டு அவற்றை அடைய முயன்றவர்கள் தான் உலகை மாற்றியிருக்கிறார்கள். வரலாறு முழுவதிலிருந்தும் இது நமக்குத் தென்படுகிறது.

நாட்டுத் தலைவருக்கும் மக்களுக்கும் இருக்கும் ஆக்கமுறையான சிந்தனையே, முன்னேறிய ஒவ்வொரு நாட்டினதும் உயர்வுக்குக் காரணமாகியுள்ளது.

புராதன காலத்திலிருந்த எமது மன்னர்கள், ருவன்வெலிசாய, ஜேத்தவனாராமய மற்றும் அபயகிரி போன்ற விசாலமான நிர்மாணங்களை, ஆக்கமுறையான சிந்தனைகளின் மூலம் தான் செய்தார்கள். மின்னேரியா குளம், கலா வாவி, பராக்கிரம சமுத்திரம் மற்றும் யோத எல போன்ற நிர்மாணங்களைச் செய்த தலைசிறந்த நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் அன்று எமக்கு இருந்தது. சீகிரியா போன்ற நகர நிர்மாணிப்புகள் இன்றும் உலகை ஆச்சரியப்படுத்துகின்றன. இலங்கையானது, பண்டைய கால உலகின் பகிரங்கமானதொரு கப்பல் மையமாக இருந்தது. அன்று எமக்கு அப்படியானவற்றைச் செய்யும் இயலுமை இருந்திருந்தால் வருங்காலத்திலும் உலகுடன் போட்டியிடும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும்.

அதற்கு இன்றியமையாத காரணியாக அமைவது நாம் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைதான். கஸ்ட காலங்கள் எப்போதும் அதேபோல் இருப்பதில்லை. கஸ்ட காலங்களை எதிர்கொள்ள, சக்திவாய்ந்த மனிதர்கள் தேவைப்படுவார்கள். அதனால், மற்றவர்களை உளரீதியாக வீழ்த்துகின்ற ஒவ்வொருவரும் இவ்வேளையில் சமூகத்துக்காகச் செய்வது உதவியல்ல.

அதனால் இப்பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆக்கமுறையான சிந்தனையை நாட்டில் ஏற்படுத்துவதற்கு நாம் எல்லோரும் பெரும் பொறுப்புடையவர்களாக உள்ளோம். அண்மைக்கால வரலாற்றில் நாம் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுள்ளோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் போரினால் தோற்கடிக்க முடியாதென்று அன்று பூரண எதிர்மறைச் சிந்தனையை கொண்டுள்ளவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தபோது, ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன போன்ற இராணுவத் தலைவர்கள், பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியுமென்ற ஆக்கமுறையான சிந்தனையை அவர்களின் கீழ் போராடிக் கொண்டிருந்த இராணுவ உத்தியோகத்தருக்குள் ஊடுருவச் செய்தனர். பிற்காலத்தில் சீரான அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் சுமார் மூன்றரை ஆண்டளவான குறுகிய காலத்தினுள் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதற்காக எமது ஆற்றல்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணமானது.

நாம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவையும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. ஆக்கமுறையுடன் கூடிய ஓர் அணுகுமுறையினூடாக எமக்கு இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடிக்கொள்ள முடியும். ஆயினும், அந்த வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்திக் கொள்வதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டிய வேலைப்பகுதி உள்ளது. தத்தமது பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அனைவரும் நாடு சார்பாக எமது உச்சகட்டப் பங்களிப்பை வழங்க முயலவேண்டும்.

கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி ஏற்றுதல் என்பதை நாங்கள் நேர காலத்தில் புரிந்துகொண்டோம். அதற்கமைய இலக்கிடப்பட்ட சனத்தொகையின் 85 சதவீதத்துக்கும் மேலான எண்ணிக்கையினருக்கு 1ஆம், 2ஆம் அலகுத் தடுப்பூசிகளை ஏற்றி நோய் நிலைமையைக் கட்டுப்படுத்தி, வழமையான மக்கள் வாழ்வை மீண்டும் தொடங்க எம்மால் முடிந்தது. இவ்வேளை ஆகும் போது, மக்களுக்கு மூன்றாம் தடுப்பூசியையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைத் தேடிக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதைவிட, அதற்கான குறுகியகால மற்றும் நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதே காலோசிதமானதாகும். ஓர் அரசு என்ற வகையில் நாம் அதன்மீது கவனத்தைச் செலுத்தியுள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்றால், நாம் கமத்தொழில், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று பிரிவுகளைவும் முன்னேற்ற வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அதேவேளை, ஏற்றுமதி வருமானத்தைக் கூட்டிக் கொள்ளக்கூடிய வழிகளின் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான எமது தேசிய கொள்கைகள் மிகவும் தெளிவானவையாக இருப்பினும், அவற்றைச் செயற்படுத்தும் போது இதைவிடச் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு ஒவ்வொரு துறையிலும் இருத்தல் வேண்டும்.

எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது முதலீடுகள் முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றன. முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், உள்நாட்டு முதலீடுகளைப் போல சர்வதேச முதலீடுகளும் அவசியமாகின்றன. விசேடமாக, பாரியளவிலான கருத்திட்டங்கள், நவீன தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் கைத்தொழில்கள், உலகச் சந்தைக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் புதிய வியாபாரங்களுக்கு சர்வதேச முதலீடுகள் தேவைப்படுகின்றன. அதற்காக, அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராகத் தவறான அபிப்பிராயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் தரப்பினர் பற்றி மக்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

தொழில் முயற்சியை ஊக்குவிக்காது, தொழில் முயற்சியாளர்களுக்கு உள்ள தடைகளை அகற்றாது, எம்மால் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த முடியாது. பல ஆபத்துகளின் மத்தியில் தன்னுடையதே என்று தொழிலொன்றை ஆரம்பித்து, பிறருக்கு தொழில்களையும் வருமானம் ஈட்டும் வாய்ப்பையும் அளிக்கின்ற தொழில் முயற்சியாளர்களை இதைவிட மதிப்புடனும், நட்புறவோடும் கவனிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. நாட்டினது அபிவிருத்தியில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்துகொண்டு இருக்கின்ற சட்டரீதியான சட்டடத்துக்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் துரிதமாக வழங்க அரச உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தொழில்களைப் பதிவு செய்யும் போதும் முதலீடுகளுக்கான அங்கீகாரங்களை வழங்கும் போதும் ஏற்படும் பெரும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதனூடாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற்பாட்டைச் செயற்படுத்த முடியும்.

மிகவும் பயனுறுதியான ஒரு பிரஜையை உருவாக்குவதற்காகப் பல முறையான கல்வித் திருத்தங்கள் இப்போது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பாடசாலைக் கல்வியை முடித்துவிடும் ஒவ்வொரு பிள்ளையும், நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் பங்களிக்கக்கூடிய தொழிலையோ அல்லது கைத்தொழிலையோ பயிலவேண்டும். தாம் தெரிந்துகொண்ட துறையில் தனது அறிவைக் கூட்டிக்கொள்வது போன்று, முடியுமானால் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும். அதனூடாக நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் நேரடியாகப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கின்றது.

விவசாயப் பண்ணையில், தொழிற்சாலையில், வேலைத்தளமொன்றில் வியர்வை சிந்தி வேலை செய்யும் மக்கள், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்கள் எல்லோரையும் நான் கௌரவிக்கின்றேன்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எமக்குப் பெரிய வளமாக இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் அவர்கள் நாட்டுக்காக முன்வந்து பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்து எமக்கு ஒத்துழைப்பு நல்கியதை நாம் மறக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் எமது பொருளாதாரதுக்காகத் தொடர்ந்து வழங்கும் பலம் மிகவும் பாராட்டத்தக்கதாகும். வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் எல்லோரையும் பிறந்த நாட்டில் முதலீடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அதன்மூலம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மேலும் செயலாக்க முறையில் பங்களிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. எம் முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றிகொண்டு, எமது வருங்காலக் குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதாயின், நாம் எல்லோரும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நம் எல்லோருக்கும் அதற்காகச் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய நேரிடலாம். அதற்குத் தேவையான எடுத்துக்காட்டுதலைத் தருவதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் தயாராக இருக்கின்றேன். தற்போதும் நான் அதனை உச்சக்கட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றேன். எல்லா அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் நாட்டுக்கு முன்மாதிரியாக எப்போதும் செயற்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்களாயின், நாட்டின் பெரும்பாலான மக்களும் உங்களைப் பின்பற்றுவார்கள். தேசிய தலைமைத்துவத்துக்கு எதிரான சக்திகள் மிகச் சூட்சுமமான பல பொய்ப் பிரசாரங்களினூடாக மக்களைத் தவறான பாதையில் எடுத்துச் செல்ல முயல்கின்றன.

எப்போதும் மதிநுட்பத்துடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்துப் பார்த்து உண்மையை அறிந்து கொண்டு தீர்மானங்களை எடுப்பதாயின், ஒருவராலும் மக்களைத் தவறான பாதையில் கொண்டுசெல்ல முடியாது.

எதிர்காலச் சந்ததிக்காக வென்றெடுத்த சுதந்திரத்தை எப்பொழுதும் பாதுகாப்பேன் என்றும் எமது நாட்டின் ஒற்றையாட்சி, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையைப் பாதுகாப்பேன் என்றும்ஈ அரச தலைவர் என்ற வகையில் நான் உறுதியளித்துள்ளேன். நாங்கள் எப்பொழுதும் அந்த உறுதியுரையைப் பாதுகாப்போம். கலாசாரச் சுதந்திரம் ஒவ்வோர் இனத்துக்கும் முக்கியமானது. ஆயிரம் வருடகால வரலாற்றைக் கொண்ட பாரம்பரிய சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் எமது பண்புகளைப் பாதுகாத்தல் என்பவற்றை எமது அடிப்படைப் பொறுப்பாகக் கருதுகின்றோம். கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி அழிந்து கொண்டிருந்த தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும் நடொன்றாகும். குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சார்த்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்ட போதும், எவ்விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கவும் மாட்டாது.

எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் இந்நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம். இந்த அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்த அதே விதத்தில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

நாங்கள் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப் படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். நாங்கள் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில், பசுமைக் கைத்தொழில், புதுப்பிக்கத்தக்க சக்திப் பயன்பாட்டு மேம்பாடு, புதிய உலகத்துக்கு ஏற்ற கல்வித் திருத்தங்கள், தேசிய தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல், ஏற்றுமதி பல்வகைத்தன்மை, மற்றும் பெறுமானத்தை அதிகரித்தல், பொருளாதாரத்தின் புதியதொரு பாய்ச்சலுக்காகத் தொழில்நுட்பப் பாவனையைப் பரவலாக்கல் போன்ற நாம் அடையாளம் கண்டுகொண்ட முன்னுரிமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

பயன்மிக்க பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பம், ஒழுக்கமான குணநெறிகளைக் கொண்ட சமூகம் மற்றும் சுபீட்சத்தின் நோக்கு ஆகிய ஆரம்பகட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

மிகவும் கஸ்டமானதொரு சந்தர்ப்பத்தில் தான் எனக்கு நாட்டின் தலைமைத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளினுள், எதிர்பாராத பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண நேரிட்டது. அவ்வனைத்துக் கஸ்டங்களுக்கும் மத்தியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமது அரசினால் மேற்கொள்ளப்பட்டன.

எனது எஞ்சிய பதவிக் காலத்தினுள் நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களெல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தளவு தடைகள் வந்தாலும் எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் எதிர்காலத்துக்கான பங்களிப்பை வழங்கினால், எம்மால் அந்நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை எய்திய அபிமானமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுசேருமாறு அனைத்து நாட்டுப் பற்றுள்ள இலங்கையர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், கொவிட் தொற்றொழிப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களுடன், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவப் படையினர், இதற்கான அணிவகுப்பு மரியாதைகளில் ஈடுபட்டிருந்ததோடு, இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மஹா சங்கத்தினர், அனைத்து மதத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரமுள்ள ஐந்தாவது ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்