உலகின் மிகவும் தேடப்படும் பெண்… ரூ 42 கோடி பரிசு அறிவிப்பு

உலகின் மிகவும் தேடப்படும் பெண் என கருதப்படும் மாயமான கிரிப்டோ ராணியை கைது செய்ய உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ 42 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானிய குடியுரிமை கொண்ட பல்கேரியாவில் பிறந்த Ruja Ignatova என்பவரே உலகின் மிகவும் தேடப்படும் பெண் என அறியப்படுகிறார். இவர் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி மோசடிகளில் ஒன்றின் முதன்மை குற்றவாளி என்றே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

2014ல் OneCoin என்ற போலியான கிரிப்டோ ஒன்றை அறிமுகம் செய்து, அதனூடாக முதலீட்டாளர்களின் 4 பில்லியன் டொலர் தொகையை மோசடி செய்துள்ளார். தற்போது 43 வயதாகும் ருஜா, கடந்த 2017 முதல் எந்த அடையாளமும் இன்றி மாயமாகியுள்ளார்.

2022ல் இருந்து மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார். இவர் தொடர்பில், உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு 100,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என முன்னர் FBI அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால் அதன் பின்னர் படிப்படியாக 5 மில்லியன் டொலர் (சுமார் ரூ 42 கோடி) என அறிவித்துள்ளனர். ருஜா பொதுவாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பயணப்படுகிறார் என்றே நம்பப்படுகிறது.

தமது முக அமைப்பை அவர் மாற்றியிருக்கலாம் என்றும் இதனால் அவர் அடையாளம் காணப்படாமல் போகலாம் என்றும் FBI அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், அவர் ஜேர்மன் குடியுரிமை கொண்டவர் என்பதால்,

அந்த நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அமீரகம், ரஷ்யா, கிரேக்கம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணப்பட வாய்ப்பிருப்பதாகவும் FBI அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல்கேரிய மாஃபியாக்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் FBI அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கடைசியாக அவர் அக்டோபர் மாதம் 2017ல் சோபியாவிலிருந்து ஏதென்ஸுக்கு ரியானேர் விமானத்தில் பயணப்பட்டுள்ளார்.

2018ல் சொகுசு படகு ஒன்றில் வைத்து ருஜா கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது. மேலும் ருஜாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அயோனியன் கடலில் வீசப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால், ருஜா தற்போதும் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கையில் FBI அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்