சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்