நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை வரை நடைமுறையில் இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை குறித்த கடல் பகுதிகளில் படகுப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் கடுமையான காற்று நிலைமைகள் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.