யாழில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி கைது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழில் (Jaffna) பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி என கைது செய்யப்பட்ட நபரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த உத்தரவை யாழ். நீதிமன்றம் நேற்று (24) பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களும் மற்றும் ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டன.

இதன்பின்பு யாழ். குற்றத்தடுப்பு காவல்துறையினர், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், அவரை இரண்டு நாட்கள் காவல்துறையின் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.

இதனடிப்படையில், அவரை தடுப்புகாவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்