மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில், வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பெண் பிரஜையை கடுமையாக தாக்கிவிட்டு, இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்க சங்கிலி, 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயத்தாள்கள் என்பவற்றை கும்பலொன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (20) மட்டக்களப்பு, கல்லடி, பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இந்த தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 12 மணியளவில் அவ்வீட்டினது குளியலறையின் ஜன்னல் கதவை உடைத்து, கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
அவர்கள் அலுமாரியை உடைத்து, அதிலிருந்த 72 ஆயிரம் சுவிஸ் பிராங் (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 2 கோடி 40 லட்சம் ரூபாய்), தங்கச் சங்கிலி, 29 ஆயிரம் ரூபாய் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் .
அவ்வேளை, கொள்ளையர்கள் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த 62 வயதான வயோதிபப் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு, பின்னர் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது
1990இல் இந்த பெண் தனது கணவருடன் சுவிஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார்.
தற்போது கணவரும் மகளும் சுவிஸ் நாட்டில் வசிக்கின்றனர். பெண்ணின் கணவர் பொறியியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் சுவிஸ் நாட்டில் பணியாற்றுகின்றனர்.
அந்த பெண் சுவிஸ் நாட்டில் தாதியாக பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
சுவிஸ் நாட்டுப் பிரஜையாக இருந்தபோதிலும் மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வந்து, தனது வீட்டில் தங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் தடயவியல் சொகோ பொலிஸ் பிரிவினர் மோப்ப நாய்களுடன் தீவிர விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.