இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்களை கோரி வருகின்றார்கள்.
இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் ஆரம்பமானது.
இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றும் அரசியல்வாதிகள் தமது பிரசாரங்களில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளினால் அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற இந்த சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து, இளம் சமூகத்திற்கு எவ்வாறான புரிதல் இருக்கின்றது என்பது குறித்து பிபிசி தமிழ் அறிய முயன்றது.
வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சென்று இளைஞர், யுவதிகளை சந்தித்த நாம், அவர்களிடம் இதுகுறித்த கேள்வியை எழுப்பினோம்.
’அர்த்தம் தெரியாது’
”எல்லா அரசியல்வாதிகளும் 13-வது திருத்தம், சுய நிர்ணயம், தமிழ் தேசியம் என்று தான் கதைக்கின்றார்கள். ஆனால், அது என்னவென்று யாரும் சொல்வதில்லை. எல்லாரும் எனக்கு வாக்களியுங்கள் என்றும் தமிழ் தேசியம் என்றும் கதைப்பார்கள். அதன் வரைவிலக்கணத்தை சொல்வதில்லை.,” என நெடுங்கேணியைச் சேர்ந்த பார்த்தீபன் தெரிவித்தார்.
இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார் நொச்சிமேடையைச் சேர்ந்த ரியா.
சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்றவை தனக்கு புரியவில்லை என வவுனியாவைச் சேர்ந்த தனுஷ் கூறுகின்றார்.
இந்த சொற்கள் அனைத்தும் சுத்த தமிழ் மொழியில் இருப்பதனால், என்னவென்றே தெரியவில்லை என பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் தெரிவிக்கின்றார்.
என்ன காரணம்?
சுயநிர்ணய உரிமை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் தமிழர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இன்றைய தமிழ் இளைஞர்கள் மத்தியில் தற்போது அது தொடர்பில் பெரிய விவாதம் இல்லாததற்கு காரணம் என்ன?
இந்த விடயம் தொடர்பில் அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரனிடம் பிபிசி தமிழ் வினவியது.
”2009-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, இங்கிருக்கக் கூடிய எந்த தமிழ் கட்சிகளும் இளைஞர்களுக்கு வரலாறு சொல்லி கொடுக்கவில்லை. இன்றைக்கு கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகமாக எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெரியுமே தவிர, அதை இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை எந்த தமிழ் கட்சியும் வைத்துக்கொள்ளவில்லை.” என்று அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளுக்கு இது பாதிப்பா?
வடக்கு, கிழக்கு மாகாணம், மலையகம், கொழும்பு போன்ற இடங்களில் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் மேழிக்குமரன்.
சமஷ்டி, அரசியலமைப்பின் 13வது திருத்தம், சுய நிர்ணய உரிமை (சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமை), தமிழ்த் தேசியம், அதிகார பகிர்வு போன்ற சொற்களுக்கான விளக்கத்தை மேழிக்குமரன், பிபிசி தமிழிடம் அளித்தார். அந்த வார்த்தைகளுக்கு அவர் தந்த விளக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி என்றால் என்ன?
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. ஆனபடியால், ஒரு கூட்டாட்சி முறைமையை கொண்டு வர வேண்டும். இந்த கூட்டாட்சி முறைமையை சொல்லுகின்ற சொல் தான் சமஷ்டி. தமிழர் அமைப்புகள் சமஷ்டியை வலியுறுத்த காரணம். அது கூட்டாட்சி முறைமையை கொண்டு வரும்.
அரசியலமைப்பின் 13-வது திருத்தம்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கான நடைமுறைகளை மாகாண சபை முறைமையாக கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அது யாப்பில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒரு திருத்தம். 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தமாகும். தமிழர்களுக்காக அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரெயொரு நடைமுறை மாகாண சபை முறைமையாகும்.
மாகாண சபை முறைமை இலங்கை முழுவதும் இருந்தாலும், அது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது.
தமிழ்த் தேசியம்
உலகத்தில் வாழ்கின்ற எல்லா இனங்களும் தங்களுடைய சுய மரியாதையுடன் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான மொழியையும், இனத்தையும் இணைப்பது தான் தேசியம்.
“தமிழர்களாக இருக்கின்றமையினால், தமிழ்த் தேசியம் எனப்படுகிறது. சிங்கள மக்களுடன் இரண்டற கலப்பதன் மூலம் தமிழ்த் தேசியம் மரணித்து விடும். உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும் அவர்களுடைய தேசியம் ஒன்று இருக்கின்றது.” என்கிறார் மேழிக்குமரன்.
அரசியல் கட்சியினர் கூறுவது என்ன?
அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரன் வெளியிட்ட கருத்து குறித்து, இலங்கையின் பழமையான அரசியல் கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கத்திடம் பிபிசி தமிழ் வினவியது.
”இந்த சொற்பதங்கள் எல்லாம் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மேடை பேச்சுகளில் எந்தளவிற்கு அர்த்தம் புரிந்து பேசுகின்றார்கள் என்பதில் எனக்கும் சந்தேகம் நிலவுகின்றது. இதுவொரு எங்களின் உணர்வை காட்டக்கூடிய வீரமான சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றது.
யுத்த காலத்திலும், அதற்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு வரையும் இந்த சொற்களை பயன்படுத்தி மக்களை அரசியல்மயப்படுத்தக் கூடிய சூழல் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு பிறகு அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தங்களுடைய உணர்வுகளை காட்டக்கூடிய அல்லது அரசியல் பேசக்கூடிய ஒரு நிலைமை இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.” என்று அவர் கூறினார்.
“அப்படி ஏற்படுத்தப்பட்டாலும் கூட அரசியல் கட்சிகள் மக்களை அரசியல் ரீதியாக அரசியல்மயப்படுத்தல் வேலைத்திட்டத்தில், தமிழ் கட்சிகள் எல்லாம் பெருமளவிற்கு தோல்வியை கண்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தமிழர்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு மிகவும் குறைந்தளவே நடைபெற்றிருக்கின்றது.
அரசியல் கட்சிகள் நிச்சயமாக மக்களை, குறிப்பாக இளம் சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் தேவை இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்திற்கு பிறகு எங்களால் இதனை செய்வதற்கு ஓரளவு இலகுவாக இருக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பை உணர்ந்து எதிர்காலத்தில் செயல்படும் என்று நம்புகிறேன்.” என பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.
பதவி,பிபிசி தமிழுக்காக
ரஞ்சன் அருண் பிரசாத்