நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது.
வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பேருந்துகளை அதிகபட்சமாக சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை பயணிகளின் போக்குவரத்து தேவை கருதி மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி பெற்றுள்ள பேருந்துகளையும், சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பேருந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பெஸ்டியன் மாவத்தை அலுவலகத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக சாதாரண நாட்களில் பணியில் இருக்கும் அதிகாரிகளை விட அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையின் பின்னர் கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, பயணிகள் தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் தற்காலிக அனுமதிப்பத்திரங்களின் கீழ் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.





