பிரித்தானிய இன்ஸ்டாகிராமரை வெளியேற்ற ரணில் உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார். ஆகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கெய்லி பிரேசரின் இல்லத்திற்கு சென்ற குடிவரவு அதிகாரிகள் குழுவொன்ரூ அவரது பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியது . குடிவரவு அதிகாரிகள் அவரது இல்லத்தில் விசாரணை நடத்துவது வீடியோவாக எடுக்கப்பட்டு பல தளங்களில் வைரலாகி, காலி முகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சர்ச்சையை உருவாக்கியது.

விசாரணையை எதிர்கொள்வதற்காக ஆகஸ்ட் 11 ஆம்திகதி பிரேசர் குடிவரவுத் தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் காலக்கெடுவை வழங்கினர். இருப்பினும், அவர் மேலும் நாட்டில் இருக்க விரும்புவதாகக் கூறி குடிவரவுத் திணைக்களத்தின் உத்தரவை செல்லாததாக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். எவ்வாறாயினும், அத்தகைய கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அதன் பிறகு அவர் தலைமறிவாகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
குடிவரவுத் துறை வட்டார தகவல்களின்படி, மருத்துவ காரணங்களுக்காக கெய்லி பிரேசர் 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளார். விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், சுதேச மருந்துகளை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதிகாரிகள் இது குறித்து அண்மையில் விசாரணைகளை நடத்தியபோது, ​​அ வர் விசாவில் குறிப்பிட்டபடி அத்தகைய மருந்தை உட்கொள்ளவில்லை, மாறாக மருந்துகளின் பல்வேறு ஊக்குவிப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதகவும் , மேலும் உளவியல், வயது வந்தோருக்கான உறவு பிரச்சினைகள், போதைப்பொருள் ஆகியன தொடர்பான சிகிச்சையாளராக சேவைகளை மேற்கொண்டார் எனவும் தெரிவிய வந்துள்ளது
விசா நிபந்தனைகளை மீறியதால் இலங்கையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இதுவே காரணம் என்றும், காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணை நடத்தி வருவது உண்மைக்குப் புறம்பானது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைமறிவாகியுள்ள குறித்த சுற்றுலாப்பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தமக்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும் பொலிஸாரையும் கோரியுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்