இந்தியன் 2 படத்தால் நொந்து போயிட்டேன், பிரியா பவானி!

இந்தியன் 2 படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் கடுமையாக விமர்சித்தனர். முதல் பாகம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக இந்தியன் 2 படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் காட்சிகளை தான் ட்ரோல் செய்தார்கள் என்று பார்த்தால் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

ட்ரோல் செய்ய மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால், இந்தியன் 2 படத்துக்கு முன்னதாக பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன், அகிலன், பீமா, ரத்தினம் ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அவர் ராசியில்லாத ஹீரோயின் அவர் இந்தியன் 2 படத்தில் நடித்த காரணத்தால் தான் படம் தோல்வி அடைந்துள்ளது என்பது போல ட்ரோல் செய்து வந்தனர்.

இப்படியான ட்ரோல் மற்றும் மக்களிடம் இருந்து வந்த திட்டு அனைத்தும் நடிகை பிரியா பவானி சங்கரை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாம். அது மட்டுமின்றி இந்தியன் 2 படத்தின் மூலம் ரசிகர்களை திருப்தி படுத்தமுடியவில்லை என்பதற்கு மன்னிப்பும் கேட்டு சமீபத்திய பேட்டி ஒன்றில் குமுறியுள்ளார்.

டிமாண்டி காலனி 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” என்னை பொறுத்தவரை வேண்டும் என்றே ஒரு படம் தோல்வி ஆகவேண்டும் என்று யாரும் எடுக்கமாட்டார்கள். ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க காசு போடுகிறார் என்றால் அந்த படத்தில் பணியாற்றும் அனைவரும் முழு உழைப்பை கொடுப்பார்கள். அது ஒரு சில இடங்களில் மாறுவதால் படம் சரியாக ஏற்றுக்கொள்ளபடுவதில்லை.

இந்தியன் 2 திரைப்படம் வெளியான பிறகு என்னை மக்கள் ரொம்பவே திட்டினார்கள். அவர்கள் திட்டி என்னை ட்ரோல் செய்தது என்னை ரொம்பவே காயப்படுத்தியது. ஆனால், சினிமாவில் இருக்கும் நடிகைகள் கமல் சார் & ஷங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்றால் அந்த வாய்ப்பை நிராகரிப்பார்களா? எனக்கு வாய்ப்பு கிடைத்தது நான் நடித்தேன்.

இருந்தாலும் இந்தியன் 2 படத்தால் ரசிகர்களை திருப்தி படுத்தமுடியவில்லை அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” எனவும் நடிகை பிரியா பவானி சங்கர் வேதனையுடன் பேசியுள்ளார். மேலும், இவர் நடிப்பில் அடுத்ததாக டிமாண்டி காலனி 2 வரும் ஆகஸ்ட் 15-ஆம் திகதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்