உருக்குலைந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.

இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட இருந்தது. விமானத்தில் 230 பயணிகள், 10 கேபின் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என 242 பேர் மொத்தமாக இருந்தனர்.

விமானம் மதியம் 1.38 மணியளவில் விமான நிலைய ஓடுதளத்திலிருந்து கிளம்பியது. விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் முன்னிலையில் விமானம் சீராக ஓடுதளத்தில் ஓடியது.

வழக்கம் போல் எவ்வித இடையூறுமின்றி டேக் ஆஃப் ஆன விமானம் புறப்பட்ட 5-ஆவது நிமிடத்தில் தடுமாற ஆரம்பித்தது. சுமார் 825-வது அடியை எட்டிய போது விமானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் திணறியது.

ஆபத்தை உணர்ந்த கேப்டன் சுமீத் சபர்வால் ஆபத்துக் காலத்தில் விடுக்கப்படும் ‘மே டே’ சமிஞ்ஞையை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு 3 முறை அறிவித்தார்.

ஆனால் அதற்குள் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க ஆரம்பித்தது. விமான நிலையத்திலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மேகனி நகர் பகுதியில் விமானம் விழுந்து சம்பவ இடத்திலேயே வெடித்துச் சிதறியது.

விண்ணை நோக்கித் தீப்பிழம்புகள் எழுந்த நிலையில், அடர்த்தியான கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திற்குள் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன.

அப்பகுதி மக்களும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டாலும் ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விமானத்தில் இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் கனடா நாட்டவர் ஒருவர் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த கோர விபத்தில் இருந்து ஒரு பயணி மட்டும் உயிரோடு தப்பியுள்ளார். அதன்படி இருக்கை எண் 11 ஏ – வில் பயணம் செய்த விஸ்வாஷ் குமார் என்பவர் உயிர் தப்பியுள்ளதாக அகமதாபாத் பொலிஸ் ஆணையர் ஜி.எஸ்.மாலிக் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்