மன்னார் தீவு தோண்டப்பட்டு, மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,”ஜனாதிபதி அநுர குமாரவின் அரசாங்கம் இல்மனைட் அகழ்விற்காக மன்னார் தீவை இந்திய அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. இது போன்று மேலும் பல திட்டங்களிலும் இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
மன்னார் தீவு கடலுடன் நீண்ட ஒரு நிலப்பரப்பு காணப்படுகிறது. அதில் கடல் பகுதியில் இருந்து கரையை நோக்கி 100 மீட்டர் தோண்டப்படவுள்ளதுடன் அதன் ஆழம் 6.5 மீட்டர்களாகும்.
அவ்வாறு தோண்டினால் மன்னாரில் வாழும் மக்களுக்கான நிலம் குறைவடைந்து குடிக்க நீரும் அற்றுப்போகும் நிலையில் மக்கள் மன்னாரை விட்டு வெளியேரும் சூழல் ஏற்படும். அப்போது மன்னார் தீவு இந்தியாவுக்கு முழுமையாக தாரைவார்க்கப்படும்.
ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள இந்தியா ராமர் பாலம் அல்லது சேது சமுத்திரப் பாலம் மீளமைக்கப்படவுள்ளன.
இலங்கை கடற்பகுதியில் அண்மித்து seamount அதாவது கடல் மலை பகுதியில் பல கனிமங்கள் நிறைந்துள்ளன. அந்த கனிமம் மீள்சார்ஜ் செய்யும் பெட்டரிகளுக்கு பயன்படுத்தப்படும் கனிமமாகும்.இவை கொங்கோ,ஆபிரிக்கா நாடுகளிலே காணப்படுகிறது.
இந்த seamount இலங்கையில் இருந்து 650 மையில் அதாவது 1050 கிலோ மீட்டராகும். மேலும் இந்தியாவில் இருந்து 840 மையில் அதாவது 1350 கிலோ மீட்டராகும். இந்நிலையிலேயே குறித்த கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கு வழங்கப்பட்டடுள்ளது.”என அவர் கூறியுள்ளார்.