தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற பிரிவான, ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPJD), ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.
அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், நாட்டுக்கு கொண்டுவருதல் , சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான செலவுகளுக்கான மொத்தத் தொகையாக ஒரு கோடியே 43 இலட்சத்து 29,446 ரூபா நிதி ஜப்பானால் வழங்கப்பட்டதுடன் இந்த நிதி நேரடியாக யாழ் மாநகர சபையின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில், வாகனங்களின் பயனுள்ள பயன்பாடு மற்றும் சுய பராமரிப்பு குறித்து உள்ளூர் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், தேவையான மறுசீரமைப்பு மற்றும் பரிசோதனையின் பின்னர் வாகனங்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லல் என்பன ஜப்பானிய தரப்பினால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன், பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை யாழ் மாநகரசபை முன்கூட்டியே பெறும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், திட்டத்தை 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தா காரணத்தினால், பாரவூர்தி சார்ந்த செலவுகளுக்காக வழங்கிய நிதியை ஜப்பான் கோரியுள்ளதாக யாழ் மாநகர சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்தீபன் தெரிவிகையில் , கடந்த 2019 ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்கத்தினால், ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட நான்கு கழிவகற்றல் பாரவூர்திகளை இறக்குமதி செய்வததற்காக கொடுக்கப்பட்ட ரூ .14.3 மில்லியன் பணத்தை திருப்பித் தருமாறு ஜப்பானிய தூதரகம், யாழ் மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இறக்குமதி செலவுகளுக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பான் வழங்கிய நிதியை பயன்படுத்துவதற்கு இலங்கை நிதியமைச்சு தடை விதித்ததாலேயே, இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதியை, உள்ளூராட்சி மன்றங்களால் நேரடியாக பயன்படுத்த முடியாது என்ற காரணத்தை குறிப்பிட்டு இந்த நிதியை பயன்படுத்துவதை நிதியமைச்சு தடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com