மடுவுக்காக தள்ளிவைக்கப்பட்ட கதவடைப்பை நல்லூருக்காக தள்ளிவைக்க முடியாதா?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நடந்து வரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள கதவடைப்புக்கு, யாழ்ப்பாண வர்த்தகர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை, இராணுவத்தினர் கண்டதும், தப்பியோடிய போது ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அந்த இளைஞனை இராணுவம் அடித்துக் கொன்றதாகவும், இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தார்.

அண்மைய தேர்தல் தோல்வியின் பின்னர், அரசியலில் நீடித்திருக்கும் சுமந்திரனின் நகர்வுகளில ஒன்றாக இந்த கதவடைப்பு நோக்கப்படுகிறது.

எனினும், சுமந்திரன் கதவடைப்பு அறிவித்த நாளில் மடுமாதா ஆலய திருவிழா நடக்கிறது, கதவடைப்பை எதிர்க்கிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயரில்லம் தெரிவித்ததையடுத்து, சுமந்திரன் கதவடைப்பை தள்ளிப்போட்டார்.

எனினும், நல்லூர் ஆலய உற்சவ காலத்திலேயே இந்த கதவடைப்பு நடக்கிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண வணிகர்கள் கதடைப்பு தொடர்பில் நேற்று கலந்துரையாடல் நடத்திய போது, கதவடைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாக தமிழ்பக்கம் அறிவித்தது.

மடு மாதா ஆலய திருவிழாவுக்காக தள்ளிவைக்கப்பட்ட கதவடைப்பு, நல்லூருக்காக தள்ளிவைக்க முடியாதா என வர்த்தகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மற்றொரு பிரிவினர், பாடசாலை விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கும் நாளில் கதவடைப்பு நடப்பதால் அதை ஆதரிக்க முடியாது என்றனர்.

இன்னொரு பிரிவினர், அனைத்து தமிழ் கட்சிகளும் இந்த கதவடைப்பை ஆதரிக்கவில்லையென குறிப்பிட்டு கதவடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சுமந்திரனின் கதவடைப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் சங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. விரும்பியவர்கள் கடைகளை பூட்டலாம், ஏனையவர்கள் கடைகளை திறக்கலாம் என தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இராணுவ முகாமில் திருடும் உரிமையை வலியுறுத்தியா கதவடைப்பு நடத்தப்படுகிறது என சமூக ஊடகங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

pagetamil

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்