திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். சட்டத்தரணி வேடம் அணிந்து வந்த நபர் ஒருவரால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பிரதான சந்தேகநபரை அன்றைய தினமே கைதுசெய்தனர்.

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் வேன் ஒன்றில் பயணித்த போதே புத்தளம் பாலாவி பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும் இந்த திட்டங்களுக்கு வழிவகுத்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி இதுவரை கைதுசெய்யப்படவில்லை
இந்த நிலையில் தற்போது கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 20 அதிகாரிகளின் தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். கொலை இடம்பெற்ற அன்றைய தினம் கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபட்ட காவல்துறை விசேட அதிரடிப்படையினர்,சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யக் கொழும்பு குற்றவியல் பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு காவல் நிலையத்தின் கான்ஸ்டபிளுக்கு ஏற்கனவே கொலைத் திட்டம் தொடர்பில் தெரிந்திருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, துபாயில் உள்ள கெஹல்பத்தர பத்மே மற்றும் ஷான் அரோஷ எனப்படும் மத்துகம ஷான் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் அவர்களுக்கு உதவும் நபர்களின் பாதுகாப்பில் உள்ளதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.