2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை பறிமுதல் செய்வது மாத்திரமின்றி சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்ததன் பின்னர் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது 60 மில்லியன் ரூபா பெறுமதியான மிட்சுபிஷி ஜீப் (Mitsubishi Jeep) ஒன்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வாகனத்தின் உரிமையாளருக்கு நீதித்துறை அறிவுறுத்தியிருந்த போதிலும் அவர் வாகனத்தை மறைத்து வைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை கைப்பற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னரே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாகனத்தை பெற முடிந்தது.
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்துபவர்களை கைது செய்வது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியதோடு, அவ்வாறான நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பொய்யான தரவுகளை வழங்கி சாதாரண வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.