கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார்.
தான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன் என்றும் 70 வயதான மூத்த நடிகர் கூறினார்.
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அண்மையில் தனது வரவிருக்கும் படமான தக் லைஃப் படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்வின் போது “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று கூறினார்.
இந்தக் கருத்து கர்நாடகாவில் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
கன்னட ஆதரவு குழுக்கள், கலாச்சார அமைப்புகள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நடிகரை குறிவைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் மிக உயரிய நபர்களில் ஒருவரான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமைக்குள் (30) பொது மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) அறிவித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
இதற்கிடையில், தமிழ் நடிகர்கள் மற்றும் கோலிவுட் உறுப்பினர்கள் சர்ச்சையின் மத்தியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.