ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 1.45 அளவில் இலங்கை வான்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

எனினும், அது குறித்து இதுவரையில் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று காலை எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சபாநாயகர், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதி பதவி வலிகினால், எதிர்வரும் 19ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும், 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில், நேற்று விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் பதவி விலகவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, சூழ்ச்சிகள் மூலம் முதலில் பதில் ஜனாதிபதியாகி, பின்னர் நாடாளுமன்றில் வெவ்வேறு முறையில் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் ஜனாதிபதியாவாரேயானால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட துரதிஷ்டவசமான முடிவை விடவும் மோசமான முடிவு அவருக்கு ஏற்படும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டைப் பொறுப்பேற்க தற்போது போட்டியொன்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடததி, அரசியலமைப்புக்கமைய செயற்படவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
பிரதமரும் பதவிவிலக வேண்டும் என்றே நாட்டு மக்களும், போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களும் கூறுகின்றனர். அந்தக் குரலுக்கு செவிசாய்ப்பதே முக்கியமானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





