இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் அடங்கிய முன்மொழிவுகளை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளன.

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, இந்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயல்முறை 6 வாரங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதற்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நீண்ட கால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான, விருப்பங்களை அண்மையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பகிரங்க அறிவித்தல் ஊடாக கோரியிருந்தது.

அதன்படி, எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.

இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் முன்மொழிவுகளும் எரிசக்தி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.

இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் மசகு எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com