இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்

இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது?

50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது.

வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.

பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித்.

அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை.

தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார்.

வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது.

வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான்.

இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித்.

எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, “அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

BBC

சிறப்புச் செய்திகள்