இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நீதி அமைச்சர் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் தன்னால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அனுமதி வழங்கியதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதி, இன்றைய தினம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
வர்த்தமானி வெளியிடப்பட்டு, 7 நாட்கள் முடிவடைந்ததை அடுத்து, சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
22வது திருத்தம் என்பதில் காணப்படுகின்ற குழப்பகர நிலைமையை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று தெளிவூட்டினார்.
இறுதியாக 20வது திருத்தமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சியினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்ற பெயரில் மற்றுமொரு திருத்த பிரேரணை கொண்டு வரப்பட்டது. அது நாடாளுமன்ற உறுப்பினரின் தனிநபர் பிரேரணையாகவே சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நான் தனிநபர் பிரேரணையாக 22வது திருத்தத்தை முன்வைத்தேன். அதன்பின்னர், நான் நீதி அமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர், நான் தனிநபர் பிரேரணையாக முன்வைத்த யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டு, அரசாங்கம் சார்பில் 22வது திருத்தத்தை கொண்டு வந்தேன்.
இதன்படி, இது தற்போது 22 என குறிப்பிடப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், அது 21வது திருத்தம் என அழைக்கப்படும். அது நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் பொறுப்பாகும்” என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





