கேதார கௌரி விரத பலன்கள்!

சிவனை நோக்கிய கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது.

அதன்படி, இவ்வருடம் இவ் விரதமானது சனிக்கிழமை (12) விஜயதசமியன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த விரதத்தை 21 நாட்கள், 9 நாட்கள், 7 நாட்கள், 3 நாட்கள், ஒரு நாள் என்று தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம்.

நிறைவு செய்யும் நாளுக்கு முன்பாக இருந்து எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனை நாட்கள் இருக்கலாம்.

இந்த விரதத்திற்கு ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற இரண்டு வேளையும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

உடல் சூழ்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் மூன்று வேளையும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டும் இருப்பார்கள். முக்கியமாக இந்த விரத சமயத்தின் பொழுது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் மசாலா சம்பந்தப்பட்ட பொருட்களை உணவில் சேர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதத்தை மேற்கொள்ளும் பொழுது காலையிலும் மாலையிலும் சிவன் மற்றும் பார்வதி இவர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

விரத வழிபாட்டிற்கு சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம், சிவலிங்கத்தை வைத்தும் வழிபாடு செய்ய்லாம், சிவலிங்கமும் இல்லை என்பவர்கள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருப்பது போல் கருதியும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கும் பொழுது 21 மஞ்சள் நூலை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் நூல் இல்லாத பட்சத்தில் வெள்ளை நூலில் மஞ்சளை தடவி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த மஞ்சள் நூலில் ஒவ்வொரு முடிச்சாக போட வேண்டும்.

21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் தினமும் ஒவ்வொரு முடிச்சு என்று 21 முடிச்சுகள் போட்டு விரதத்தை நிறைவு செய்துவிட வேண்டும்.

ஒன்பது நாட்கள் விரதம் இருப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் முதல் நாள் விரதம் இருக்க ஆரம்பிக்கும்போது 13 முடிச்சுகளைப் போட்டுவிட்டு ஆரம்பிக்க வேண்டும்.

பிறகு பூஜையை நிறைவு செய்யும் பொழுது 21 முடிச்சுகளாக இருக்கும். ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த ஒரு நாளிலேயே 21 முடிச்சுகளையும் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டின் சமயத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய ஏதாவது ஒரு வாசனை மிகுந்த மலர்களை வைத்து சிவன் பார்வதியின் போற்றுகளை கூறியும் மந்திரத்தை கூறியும் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

இந்த பூஜை நிறைவடைந்த பிறகு இந்த கயிறை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும்.

இந்த பூஜையை செய்யும் பொழுது கண்டிப்பாக முறையில் சிவன் பார்வதிக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

அப்படி நெய்வேத்தியமாக வைக்கும் பொழுது 21 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

ஒரு பழத்தை நெய்வேத்தியமாக வைப்பதாக இருந்தாலும் 21 பழங்களை வைக்க வேண்டும்.

ஏதாவது ஒரு கலவை சாதத்தை நெய்வேத்தியமாக வைத்தோம் என்றால் ஒரு வாழை இலையை விரித்து அதில் ஒரு சிறிய ஸ்பூனை எடுத்து அதை 21 முறை தனித்தனியாக பிரித்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்களும் இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், தங்களுடைய மனதிற்கு ஏற்ற திருமண வாழ்க்கை அமையும் என்றும் அதே சமயம் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

சிறப்புச் செய்திகள்