இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் செய்யாததை பெண் ஒருவர் செய்துள்ளார்.
2023ல் அதிக நன்கொடை அளித்துள்ள பெண்களின் பட்டியலில், இந்தியா வரிசையில் ரோகினி நிலேகனி முதலிடத்திற்கு வந்துள்ளார்.
பொதுவாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீதா அம்பானி அல்லது அதானி அறக்கட்டளையின் தலைவர் பிரீதி அதானி ஆகியோரே அதிக நன்கொடை அளிப்பவர்கள் என மக்கள் நம்பி வரும் காலகட்டத்தில்,
2023ல் ரோகினி நிலேகனி மொத்தமாக ரூ 170 கோடி தொகையை நன்கொடையாக அள்ளிக்கொடுத்துள்ளார். 2022ல் சுமார் 120 கோடி ரூபாய் இவர் நன்கொடை அளித்திருந்தார்.
இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனியை திருமணம் செய்து கொண்டுள்ளார். மும்பை மாநகரில் பிறந்த ரோகினி எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியம் பயின்றார்.
அதன் பின்னர் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 1981ல் தான் ரோகினி – நந்தன் நிலேகனி தம்பதிக்கும் திருமணம் நடந்துள்ளது.
கணவர் மென்பொருள் துறையில் சாதிக்கும் போது, ரோகினி தனக்கான தனிப்பாதை ஒன்றை உருவாக்கி, தொழில் துறையில் கோலோச்சி வந்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 619,000 கோடி என இருந்தாலும், ரோகினியின் தனிப்பட்ட முயற்சி மற்றும் முடிவுகளால் தனிப்பாதை வகுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அதற்கான சாட்சியம் தான் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பும், அள்ளிக்கொடுக்கும் நன்கொடையும். பத்திரிகையாளர் மட்டுமின்றி, சிறார்களுக்கான இலக்கியம் தொடர்பில் தனிக்கவனம் செலுத்திவரும் ரோகினி Pratham Books என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அத்துடன் கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தரும் EkStep என்ற இணைய தளத்தையும் ஊக்குவித்து வருகிறார். மேலும், நாடு முழுவதும் தண்ணீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அடையாளம் காணும் வகையில் அர்க்கியம் அறக்கட்டளை ஒன்றையும் ரோகினி நடத்தி வருகிறார்.
ரோகினியின் கணவர் நந்தன் நிலேகனியின் சொத்து மதிப்பு என்பது 3.1 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.