புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ, விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 16 ஆவது இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
ஆராச்சிக்கட்டுவ , விஜயகடுபொத பிரதேசத்தில் வசிக்கும் மஞ்சநாயக்க முதியன்சலாகே அவீஷா நெட்சரணி மஞ்சநாயக்க எனும் 15 வயதுடைய சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் போதே, கல்வி கற்பதில் திறமையை வெளிப்படுத்தி வந்த அவீஷா நெட்சரணி, முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை ஆராச்சிக்கட்டுவ விஜயகட்டுபொத மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
பின்னர், அந்த சிறுமி புத்தளம் வில்பாத அனுர மகா வித்தியாலயத்தில் இணைந்துகொண்டதுடன், அங்கு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 190 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை தொழில் நிமித்தம் கம்பஹாவுக்கு சென்ற நிலையில், சிறுமியும், தாயும் கம்பஹாவுக்கு சென்று அங்கு வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் ஐந்தாம் ஆண்டு முதல் எட்டாம் ஆண்டு வரை கம்பஹா ரத்னாவளி மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்தார்.
முதலாம் ஆண்டு முதல் எட்டாம் தரம் வரை கல்வி கற்கும் போது, அவீஷா நெட்சரணி வகுப்பில் திறமையை வெளிக்காட்டி வந்துள்ளதுடன் வகுப்பில் சகல பாடங்களிலும் 90 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக முதல் நிலையை பெற்றார்.
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் போது, தனக்கு 10 ஆம், 11 ஆம் தர பாட புத்தகங்களை படிப்பதற்கு ஆசையாக உள்ளது எனவும் குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்குமாறும் அவீஷா நெட்சரணி தமது பெற்றோர்களிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
தனது மகள் கேட்ட பாடப்புத்தகங்களை சொந்த செலவில் தந்தை பெற்றுக்கொடுத்ததுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத விரும்புவதாகவும் அதற்காக பாடசாலையில் கதைத்து சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் அந்த சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது எனவும் அந்த சிந்தனையை கைவிட்டு விட்டு படிப்பில் கவனத்தை செலுத்தும்படியும் பெற்றோர்கள் அவீஷா நெட்சரணியிடம் கூறியிருக்கின்றனர்.
எனினும் சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அவீஷா நெட்சரணி, நிச்சயமாக சிறந்த புள்ளிகளை பெறுவேன் என நம்பிக்கையும் வைத்திருந்தார்.
சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு தனக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தான் எட்டாம் தரத்துடன் கல்வியை கைவிடப் போவதாகவும் பாடசாலைக்கு செல்லப்போவதில்லை எனவும் அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
எனினும் தனது மகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவீஷா நெட்சரணியின் பெற்றோர்கள் மகள் படிக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியரை சந்தித்து மகளின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவீஷா நெட்சரணி எனும் சிறுமி சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு இன்னும் வயது இருப்பதாகவும், நல்ல முறையில் கல்வி கற்று வரும் அவரது படிப்பு பாதிப்படையும் வகையில் இடமளிக்க வேண்டாம் எனவும் அந்த பாடசாலையின் அதிபர் சிறுமியின் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தமது மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, 8ஆம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அந்த பாடசாலையில் இருந்து சட்டபூர்வமாக விலக்கியுள்ளனர்.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்டையில் வெளிவாரியாக தோற்றுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு கொரோனாவின் அகோரம் தலைதூக்கியிருந்த காலமாகும். அப்போது வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. எனினும் பிரத்தியேக வகுப்புக்கு செல்லுமாறு தனது மகளை பெற்றோர்கள் பணித்தனர்.
அதற்கு அந்த சிறுமி விருப்பத்தை தெரிவிக்கவில்லை. ஆசிரியர்களை வீட்டுக்கு அழைத்து கற்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்த போதும் அதற்கும் அந்த சிறுமி மறுப்புத் தெரிவித்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவீஷா நெட்சரணி, இரவு, பகலாக வீட்டில் இருந்தே படித்து சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றினார். இவ்வாறு சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ தர சித்திகளையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர் தான் க.பொ.த உயர் தரப் பரீட்சையையும் எழுத விரும்புவதாகவும் அவீஷா நெட்சரணி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, சாதாரண தரப் பரீட்சையை விட உயர் தரப் பரீட்சை மிகவும் கடினமானது எனவும் அதற்காக மேலதிக வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் எனவும் பெற்றோர்கள் அவீஷா நெட்சரணியிடம் கூறியுள்ளனர்.
எனினும் தனக்கு பாடப் புத்தகங்களை வாங்கித் தருமாறும், கணிதப் பிரிவை தெரிவு செய்து கொள்ள விரும்புவதாகவும் அவீஷா நெட்சரணி, தனது பெற்றோர்களிடம் கூறினார்.
மகளின் விருப்பத்திற்கு பெற்றோர்களும் தமது முழு ஆதரவையும் தெரிவித்து, தேவையான பாடப்புத்தங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மேலும் இணையத்தளம், யூரியூப் என்பனவற்றின் உதவியுடன் ஒரு வருடத்தில் கணித பிரிவுக்கான பாடப்பரப்பை தேடி கல்வியும் கற்றார்.
பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுத தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பதையும் விண்ணப்பித்து, நம்பிக்கையுடன் பரீட்சையும் எழுதி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக் கொண்டதுடன் புத்தளம் மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 16 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனை பற்றி அவீஷா நெட்சரணி, இவ்வாறு கூறினார்.
நான் முதலில் என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தேன். வெற்றியடைவேன் என்று மனதில் தைரியமும் இருந்தது. வெளியுலகத்தை முற்றாக தவிர்த்து, பல தியாகங்களை செய்து கடின உழைப்புடன் கற்றேன்.
இணையத்தில் தேடிப் படித்தேன். கல்வி கற்பதற்கு இணையம் பெரும் பங்கு வகித்தது. இணையத்தில் வெறுக்கத்தக்க பக்கங்களும் உண்டு அதன்பால் சென்றால் எங்களை அது அழித்து விடும்.
எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அன்பான பெற்றோர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இந்த சந்தோசமான தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.