வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை!

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது.

இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதி அளிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனிடையே, அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில உள்ளூர் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு, தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார்.

அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்