நாடு முழுவதும் பாதுகாப்பு வழங்க போதியளவு நிதி ஒதுக்கீடு இல்லை!

நாட்டின் எல்லா இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்க போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதேச சபைகள் மட்டுமின்றி நாட்டின் எல்லா இடங்களிலும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மக்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசாங்கம் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாரிய அளவில் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதிய அளவில் சுதந்திரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு பேணியவர்கள் மத்தியில் முரண்பாடுகள் மோதல்கள் காணப்படுவதாகவும் தற்பொழுது அந்த மோதல்கள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுதும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் செயல்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு தேவையான நபர்களுக்கு தேவையான அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எல்லா இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் பாதாள உலகக் குழு செயல்பாடுகளை இல்லாது ஒழிப்பதற்கு குறிப்பிட்ட அளவு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவரோ அல்லது எதிர்க்கட்சியை சேர்ந்தவரோ மனித படுகொலை மேற்கொள்ளப்படுவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து துரித கதியில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்