வெலிகம உள்ளூராட்சி மன்றத் தலைவரின் கொலை, அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஒரு பகுதியா என சந்தேகம் எழுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற மக்கள் விடுதலை முன்னணி பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இறுதியில் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.
மக்கள் விடுதலை முன்னணியினர் முதலில் அதிகாரத்தை வாக்கு மூலம் பெற முயன்றனர். அதன் பின்னர் வேறு சில தந்திரோபாயங்களை பயன்படுத்தினர்.
இந்நிலையில், பிரதேச சபைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அரசாங்கத்தின் அடக்குமுறை இருக்கின்றதா என சந்தேகம் எழுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.





