தமிழ் தேசிய மக்கள் பேரவையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே செயற்படுகின்றோம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு ஒப்பந்தின் பிரகாரமே செயற்படுகின்றோம் என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(18.10) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர் மட்டக் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் எமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கிராம மட்டங்களில் கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியிருக்கிறோம்.

மாவட்ட மட்டக் குழுக்களை அமைத்து அதன் ஊடாக இதனை முன்னகர்த்துவது என தீர்மானித்துள்ளோம்.அதுபோல் வடக்கு – கிழக்கில் உள்ள எமது உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மட்ட உறுப்பினர்களையும் இணைத்த கூட்டங்களை விரைவாக நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பார்க்கின்ற போது மாகாணசபை தேர்தல் தொடர்பாக அரசாங்கம் பல்வேறுபட்ட முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.

சில அமைச்சர்கள் விரைவாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று கூறினாலும், பிரதம மந்திரி மற்றும் சில அமைச்சர்கள் மாகாணசபை தொடர்பான எல்லைகள் வகுக்கப்பட்ட பின்னர் தான் தேர்தல் எனக் கூறுகிறார்கள்.

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் இது தொடர்பில் அச்ச உணர்வு காணப்படுகின்றது. இந்த தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற நிலை உள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரை மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் பிற்பாடு இந்த தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்கள் ஏதாவது கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் அதனைக் கொண்டு வந்து தேர்தல் என்பது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களது கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்