யாழை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழில் பெண்ணொருவரின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தின் தடையுத்தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வழக்கிலக்கம் – AR/361/25, இவ்வழக்கில் வழக்குத்தொடுநரால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினையும் தாக்கல் செய்யப்பட்ட A அறிக்கை மற்றும் அணைக்கப்பட்ட கடிதத்தையும் ஆராய்ந்து பார்க்கின்ற போது, பூநகரி சங்குப்பிட்டி பாலத்தின் அருகே சடலமாக கரையொதுங்கிய பிரதீபா சுரேஸ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் குற்றவாளிகள் அடையாளம் தண்டனை காணப்பட்டு உரிய வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்நாரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இவ்வாறான துன்பகரமான சம்பவங்கள் எமது நாட்டில் இடம்பெறுவதனைக் கண்டித்தும், காரைநகர் பிரதேசசபை முன்பாக அமைதியான வழியில் கண்டனப் பேரணி ஒன்று (19.10.2025) ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இறந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் இவ்வாறான கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறுவது புலன் விசாரணைக்கு பாதகமாக அமையும் என்பதோடு, அப்பிரதேசத்தில் தேவையற்ற அமைதியின்மையையும், இது தொடர்பில் பதற்றத்தையும் தோற்றுவிக்கும் என்பதனை அனுமானிக்கக்கூடியதாகவுள்ளது.

எனவே புலன்விசாரணைகள் திருப்திகரமாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான கண்டனப் பேரணி ஒன்று அவசியமற்ற ஒன்றாக கருதி, குறித்த கண்டன பேரணியை தடை செய்து கட்டளையாக்குதிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்