கணேமுல்ல சஞ்சீவ கொலை, இஷார செவ்வந்தி கைது, நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“இந்த பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேடப்படும் பல நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கடவுச்சீட்டுகள் யாருடையவை என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. துறைமுகத்திலிருந்து ஆய்வு செய்யப்படாத 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடவில்லை.

தயவுசெய்து இந்த சம்பவங்களையும் விசாரிக்க” வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த விடயங்களை விசாரித்து பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.

இந்த விடயங்களை அரசியலாக்கக்கூடாது என்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்