சிவப்பு லேபள்களுடன் கூடிய 323 கொள்கலன்களை சோதனைக்குட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை நியமிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் (Mohamed Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க நாடாளுமன்ற தேர்வுக் குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரக்கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தன.
அண்மைய தினங்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையானது கொள்கலன்கள் மூலம் நாட்டினுள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் சர்ச்சைகள் வலுவடைந்தன.
ஏற்கனவே, இலங்கை சுங்கத்திலிருந்து சோதனைக்குட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சிவப்பு லேபள்களுடன் கூடிய கொள்கலன்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியிருந்தன.
எனினும், அதற்கு அரசாங்க தரப்பிலிருந்து உரிய முறையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இவ்வாறான பின்னணியில், அநுர அரசாங்கத்தில் முதலாவது அமைச்சரவை நியமனத்தின் போது போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சராக நியமிக்கப்பட்ட பிமல் ரத்நாயக்கவிடமிருந்து அண்மையில் துறைமுக அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு, அனுர கருணாதிலக்கவுக்கு குறித்த பதவி வழங்கப்பட்டது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல கருத்துக்கள் எழுந்த நிலையில், குறித்த அமைச்சுக்களை திறம்பட மேற்கொள்ளவும், இலக்குகளை விரைவில் அடையும் நோக்கிலும் இவ்வாறு பிமல் ரத்நாயக்கவின் அமைச்சுக்கள் குறைக்கப்பட்டதாக அரச தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





