கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(12) களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் நேரடியாக சென்று அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
பேருந்து நிலைய வளாகத்தினுள் பயணிகளுக்கு ஏற்படும் சிரமமங்கள், விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பயணிகள் பாதுகாப்பாக நடந்து சென்றுபேருந்துகளில் ஏறவும், குறித்த வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பேருந்து நிலையத்தின் செயற்பாட்டை மேம்படுத்தல் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு தனியார் வாகனங்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
அத்தியாவசியமான குறிப்பாக நோயாளர்கள் மற்றும் இயலாதவர்களின் நிலைமைகள் கருதி பேருந்து நிலையத்தின் முன்பகுதி வரை பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுவர்.
மேலும், இது நடைமுறைக்கு வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து பொலிஸாருக்கு குறித்த விடயங்களை உள்ளடக்கியதான அறிக்கை இந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்கப்படவுள்ளது.